Home One Line P2 மலேசியாவின் முதல் 50 பணக்காரர்களில் 4 பேர்கள் இந்திய வம்சாவளியினர்

மலேசியாவின் முதல் 50 பணக்காரர்களில் 4 பேர்கள் இந்திய வம்சாவளியினர்

1683
0
SHARE
Ad
ஆனந்தகிருஷ்ணன்

கோலாலம்பூர் – போர்ப்ஸ் வணிக ஊடகம் மலேசியாவின் முதல் 50 பணக்காரர்களின் பட்டியலை தனது மார்ச் 2020 பதிப்பில் வெளியிட்டிருக்கிறது. இவர்களில் 4 பேர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாவர்.

அந்த நால்வரும் யார் யார் என்று பார்ப்போமா?

ஆனந்த கிருஷ்ணன் – # 3-வது இடம்

மலேசியப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களின் முதல் 50 பேர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பவர் – அதாவது மலேசிய இந்தியப் பணக்காரர்களில் முதலிடத்தைப் பெற்றிருப்பவர் – டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் என்பதை விளக்கத் தேவையில்லை.

#TamilSchoolmychoice

நீண்ட காலமாக ராபர்ட் குவோக் முதலிடத்தையும், ஆனந்த கிருஷ்ணன் இரண்டாவது இடத்தையும், தக்க வைத்துக் கொண்டு வந்துள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நான்காவது, மூன்றாவது இடங்களுக்கு வந்து சரிவைச் சந்தித்தார் ஆனந்தகிருஷ்ணன்.

இந்தியாவில் அவர் ஏர்செல் நிறுவனத்திலும், அதைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சி குழுமத்திலும் செய்த முதலீடுகள் பெரும் இழப்பைச் சந்தித்ததோடு, இந்திய அரசாங்கத்தின் ஊழல் விசாரணைகளிலும் அவர் சிக்கினார். அதைத் தொடர்ந்து தனது இந்திய முதலீடுகளினால் அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் – மலேசியாவின் பணக்காரர்கள் பட்டியலிலும் அவரது நிலையைப் பின்னுக்குத் தள்ளியது.

எனினும் புதிய பட்டியலின்படி 3-வது இடத்தைப் பிடித்திருக்கிறார் ஆனந்தகிருஷ்ணன்.

மலேசியாவின் முன்னணி பங்குச் சந்தை நிறுவனங்களான அஸ்ட்ரோ, மேக்சிஸ் ஆகிய நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளைக் கொண்ட உரிமையாளராகவும் ஆனந்த கிருஷ்ணன் திகழ்கிறார்.

5.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பைக் கொண்டிருக்கிறார் ஆனந்தகிருஷ்ணன் என மதிப்பிடப்படுகிறது.

டான்ஸ்ரீ ஞானலிங்கம் # 15-வது இடம்

மலேசியாவின் முன்னணி துறைமுகமாகத் திகழும் வெஸ்ட்போர்ட்ஸ் துறைமுகத்தை நிர்வகிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் 15-வது இடத்தைப் பிடித்திருக்கிறார் டான்ஸ்ரீ ஞானலிங்கம்.

2054-ஆம் ஆண்டு வரை வெஸ்ட்போர்ட் துறைமுகத்தை நிர்வகிக்கும் உரிமையை இவரது நிறுவனம் கொண்டிருக்கிறது.

75 வயதான இவரது சொத்து மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நினியன் மோகன் லூர்டினாடின் (Ninian Mogan Lourdenadin) # 19-வது இடம்

எம்பிஎப் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான நினியனின் (படம்) சொத்து மதிப்பு 970 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்படுகிறது. ஒரு மருத்துவரான இவர் லூர்ட்ஸ் கிளினிக் என்ற பெயரிலான மருத்துவ மையங்களையும் நடத்துபவர்.

ஒரு மருத்துவராக இருந்து நில மேம்பாட்டாளராக மாறியவர். கோலாலம்பூரில் உள்ள, அம்பாங் பாயிண்ட் எனப்படும் பேரங்காடியின் மேம்பாட்டாளரும் இவர்தான்.

66 வயதான நினியன் மோகன் வெளிநாடுகளிலும் ஏராளமான சொத்துகளைக் கொண்டிருப்பவர்.

டோனி பெர்னாண்டஸ் # 41-வது இடம்

டோனி பெர்னாண்டஸ்

அறிமுகம் தேவையில்லாத – ஏர் ஆசியாவின் பெரும்பான்மை பங்குதாரரான – டோனி பெர்னாண்டஸ் 335 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பைக் கொண்டவர் என மதிப்பிடப்படுகிறது.

அண்மையில் அவரது ஏர் ஆசியா நிறுவனம் ஏர்பஸ் விமானத்தை வாங்கியது தொடர்பில் ஊழல் புகார்கள் எழுந்த காரணத்தால் 55 வயதான டோனி பெர்னாண்டஸ் தனது நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.