Home One Line P2 மலேசியாவின் முதல் 50 பணக்காரர்களின் சொத்து மதிப்பு பல்வேறு காரணங்களால் வீழ்ச்சி

மலேசியாவின் முதல் 50 பணக்காரர்களின் சொத்து மதிப்பு பல்வேறு காரணங்களால் வீழ்ச்சி

1193
0
SHARE
Ad
மலேசியாவின் முதல் 4 பணக்காரர்கள் – ராபர்ட் குவோக்,குவெக் லெங் சான், ஆனந்தகிருஷ்ணன், சென் லிப் கியோங்

கோலாலம்பூர் – இறங்குமுகமாக இருக்கும் பொருளாதாரம், கொவிட் -19 உலகமயத் தாக்குதல், பலவீனமான ரிங்கிட் மதிப்பு, பங்குச் சந்தையின் சரிவு – இப்படி பல அம்சங்களின் ஒட்டுமொத்தத் தாக்கங்களின் காரணமாக மலேசியப் பணக்காரர்களின் சொத்து மதிப்புகள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன.

போர்ப்ஸ் வணிக ஊடகம் மலேசியாவின் முதல் 50 பணக்காரர்களின் பட்டியலை தனது மார்ச் 2020 பதிப்பில் வெளியிட்டிருக்கிறது.

மலேசியப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களில் முதல் 50 பேர்களின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 79 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. ஆனால் அவர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட 7 விழுக்காடு வீழ்ச்சியடைந்திருக்கிறது.

ரோபர்ட் குவோக்
#TamilSchoolmychoice

போர்ப்ஸ் வணிக ஊடகம் வெளியிட்டிருக்கும் தகவல்களின்படி ராபர்ட் குவோக் இன்னும் மலேசியாவின் முதலாவது பணக்காரராகத் திகழ்கிறார். அவரது சொத்து மதிப்பு 11.5 பில்லியன் டாலர்களாகும். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தனது முதலாவது நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

எனினும் ராபர்ட் குவோக்கின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட 1 பில்லியன் டாலர்கள் குறைந்திருக்கிறது.

இரண்டாவது இடத்தை ஹோங் லியோங் குழுமத்தின் தலைவர் குவெக் லெங் சான் பிடித்திருக்கிறார். நீண்ட காலமாக இரண்டாவது இடத்தைத் தக்கவைத்திருந்த ஆனந்தகிருஷ்ணனைப் பின்னுக்குத் தள்ளி குவெக் லெங் சான் முன்னணிக்கு வந்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னரே இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட ஆனந்தகிருஷ்ணன், தொடர்ந்து மலேசியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர் நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டில் மலேசியப் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்திருந்த பப்ளிக் வங்கியின் உரிமையாளர் டான்ஸ்ரீ தே ஹோங் பியோவ் இந்த ஆண்டு 5-வது இடத்திற்கு சரிந்திருக்கிறார்.

டோனி பெர்னாண்டஸ்

ஏர் ஆசியா நிறுவனத்தின் உரிமையாளர்கள் டான்ஸ்ரீ டோனி பெர்னான்டஸ் மற்றும் டத்தோ கமாருடின் மெரானுன் ஆகிய இருவரும் தங்களின் சொத்து மதிப்புகளில் மூன்றில் ஒரு பங்கை இழந்திருக்கின்றனர்.

கொவிட்-19 பாதிப்புகளால் உலகம் முழுவதும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சியடைந்தது ஏர் ஆசியா உரிமையாளர்களான அவர்களின் சொத்து மதிப்பு வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும். இன்னொரு காரணம், ஏர்பஸ் விமானத்தை வாங்குவதில் ஊழல் நடந்ததாக பிரிட்டன் நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவல்களாலும் அவர்களின் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததோடு, அவர்களின் தோற்றமும் பாதிக்கப்பட்டது.

மலேசியாவின் மற்றொரு பிரபல கோடீஸ்வரரான டான்ஸ்ரீ வின்சென்ட் டான் சொத்துகளின் மதிப்பும் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. இந்த ஆண்டுக்கான புதிய பட்டியலில் 23-வது இடத்தைப் பிடித்திருக்கும் வின்சென்ட் டான்னின் பெர்ஜெயா கொர்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளின் விலைகள் கடந்த ஓராண்டில் மட்டும் 14 விழுக்காடு வரை குறைந்து, அதன் காரணமாக, வின்சென்ட் டான்னின் சொத்து மதிப்பும், 2.6 விழுக்காடு வீழ்ச்சியடைந்து தற்போது 750 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.

அண்மையில் சுபாங் சீ பீல்ட் ஆலய உடைப்பு சர்ச்சைக்குள்ளான போது அந்த ஆலயத்திற்கு நல்லெண்ண வருகை மேற்கொண்ட வின்சென்ட் டான் அந்த ஆலய நிலத்தை நாமே வாங்குவோம் என்று கூறி அதற்காக 5 இலட்சம் ரிங்கிட் வழங்கவும் முன்வந்து இந்திய சமுதாயத்தின் மதிப்பையும் கவர்ந்தவராவார்.

பல பணக்காரர்களின் சொத்து மதிப்புகள் வீழ்ச்சியடைந்தாலும் ஒரு சிலரின் மதிப்பு உயரவும் செய்திருக்கிறது.

உதாரணமாக, சூதாட்ட விடுதிகள் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் டான்ஸ்ரீ சென் லிப் கியோங் (Tan Sri Chen Lip Keong) 5.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் 4-வது இடத்திற்கு முதன் முறையாக முன்னேறியிருக்கிறார்.

பணக்காரர்கள் பட்டியலில் புதிய வரவுகள்

லீ இயோவ் செங் – முன்னாள் அமைச்சர் இயோ பீ யின்

மலேசியாவின் முதல் 50 பணக்காரர்கள் பட்டியலில் சில புதிய வரவுகளும் உண்டு. லீ இயோவ் சோர் மற்றும் லீ இயோவ் செங் (Lee Yeow Chor and Lee Yeow Seng) ஆகிய இரு சகோதரர்கள்தான் அந்தப் புதியவர்கள். பணக்காரர்கள் பட்டியலுக்குத்தான் இவர்கள் புதியவர்களே தவிர, வணிகத்திற்கு இவர்கள் புதியவர்கள் அல்ல. ஐஓஐ (IOI) எனப்படும் மாபெரும் செம்பனைத் தோட்ட, நில மேம்பாட்டாளரான டான்ஸ்ரீ லீ ஷின் செங் என்பவரின் புதல்வர்கள்தான் இவர்கள். டான்ஸ்ரீ லீ கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் காலமானதைத் தொடர்ந்து அவரது 4.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துகளை இந்த இரு சகோதரர்களும் வாரிசுகளாகப் பெற்று, பிரித்துக் கொண்டுள்ளனர்.

தந்தையார் டான்ஸ்ரீ லீ இருந்த காலத்தில் அவரது வாழ்நாளில், மலேசியாவின் முதல் 50 பணக்காரர்களில் அவரும் ஒருவராகத் திகழ்ந்து வந்தார். இப்போது அவரது மரணத்திற்குப் பின்னர் அவரது இரு மகன்களும் அந்தப் பட்டியலில் இடம் பெறத் தொடங்கியுள்ளனர்.

இந்த இரு சகோதரர்களில் இளையவரான லீ இயோவ் செங், முன்னாள் அமைச்சர் இயோ பீ யின்னை மணந்திருக்கிறார். கவிழ்க்கப்பட்ட நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் அறிவியல், தொழில்நுட்ப, பருவநிலை மாற்றம் மற்றும் சூழியலுக்கான அமைச்சராக இடம் பெற்றிருந்தவர் ஜசெகவின் இயோ பீ யின் ஆவார்.

போர்ப்ஸ் ஊடகத்தின் 50 பணக்காரர்கள் பட்டியலில் துன் மகாதீரின் மகன் மொக்சானி மகாதீர் 45-வது இடத்தைப் பிடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தொகுப்பு : இரா.முத்தரசன்