Home நாடு “சீ பீல்ட் ஆலய நிலத்தை சேர்ந்து வாங்குவோம் – 5 இலட்சம் தருகிறேன்” – கோடீஸ்வரர்...

“சீ பீல்ட் ஆலய நிலத்தை சேர்ந்து வாங்குவோம் – 5 இலட்சம் தருகிறேன்” – கோடீஸ்வரர் வின்சென்ட் டான்

1946
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலய விவகாரத்திற்கு, மலேசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான டான்ஸ்ரீ வின்சென்ட் டான் தீர்வு ஒன்றை முன்மொழிந்திருக்கிறார். அதன்படி, ஒரு நிதியைத் தோற்றுவித்து அந்தப் பணத்தைக் கொண்டு ஆலயம் அமைந்திருக்கும் நிலத்தை நாமே வாங்குவோம் என அவர் கூறியிருக்கிறார்.

அந்த ஆலயம் அங்கேயே நிலைநிறுத்தப்பட இதுவே சிறந்த வழி என்று கூறிய அவர் “பொதுமக்கள் நிதியைக் கொண்டு, அந்த நிலத்தை வாங்குவோம். நிலத்தின் உரிய விலையை மேம்பாட்டாளருக்குக் கொடுத்துவிட்டு ஆலயம் அங்கேயே இருப்பதை உறுதி செய்வோம்” என்றும் கூறியிருக்கிறார்.

ஒரு சீனராக இருந்தாலும், வேறு மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், பெரும் பணக்காரராக இருந்தாலும், இந்து சமூகத்தின் பிரச்சனை ஒன்றுக்கு தீர்வு காண ஒத்துழைக்க முன்வந்திருப்பதன் மூலம் இந்தியர்களின் மனங்களில் வின்சென்ட் டான் தனியிடத்தைப் பெற்றுவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.

#TamilSchoolmychoice

அதுமட்டுமல்ல! வெறும் வாய்மொழி தீர்வு என்பதோடு நின்றுவிடாமல் இந்த நிதிக்கு 5 இலட்சம் தந்து நிதியைத் தொடக்குவதற்கும் வின்சென்ட் வாக்குறுதி அளித்தார்.

அவரைத் தொடர்ந்து டான்ஸ்ரீ பேரி கோ (Tan Sri Barry Goh) என்ற வணிகரும் 5 இலட்சம் தர முன்வந்திருக்கிறார். இவர் முன்பு எம்சிடி பெர்ஹாட் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இருந்தார். இந்த எம்சிடி நிறுவனம்தான் ஆலயம் அமைந்திருக்கும் சுற்றுவட்டார நிலப்பகுதிகளை மேம்படுத்தியது. பின்னர் ஆலயம் அமைந்திருக்கும் நிலத்தை பிலிப்பைன்ஸ் நாட்டு நிறுவனமான அயாலா லேண்ட் நிறுவனம் எம்சிடி நிறுவனத்திடமிருந்து வாங்கியது.

டான்ஸ்ரீ டேவிட் கோங் என்ற மற்றொரு சீன வணிகரும் 5 இலட்சம் ரிங்கிட் வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

ஆக, இப்போதே ஆலய நிலத்தை வாங்கும் முயற்சிக்கு 15 இலட்சம் ரிங்கிட் சேர்ந்து விட்டது.

“சிலாங்கூர் அரசாங்கம் அந்த ஆலய நிலத்தை வாங்கிக் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது சிரமமான ஒன்றாகும். இதனைத் தொடர்ந்து மேலும் பல மலேசியர்கள் ஆலயத்திற்கு நன்கொடை அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். பொதுவாக மலேசியர்கள் அனைவருமே வழிபாட்டுத் தலங்கள் மீது மரியாதை கொண்டவர்கள். மேலும் மத சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்பவர்கள்” எனவும் வின்சென்ட் டான் தெரிவித்தார்.

சீ பீல்ட் ஆலயம் அமைந்திருக்கும் 1.1 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 14.37 மில்லியன் முதல் 15.33 மில்லியன் ரிங்கிட் வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

“நான் புத்தமதத்தைப் பின்பற்றுபவன். மாஸ்டர் செங் யான் (Master Cheng Yen) என்ற குருவைத் தோற்றுநராகவும், தலைவராகவும் கொண்டு செயல்படும் ட்சு சீ (Tzu Chi Buddhist charity group) என்ற புத்தமதப் பிரிவைச் சேர்ந்தவன். எங்களின் குரு கற்றுத் தந்ததை நான் எப்போதும்  பின்பற்றுகிறேன். மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், சகிப்புத் தன்மையையும் அவர் போதித்தார். எங்களின் இந்த புத்தமத இயக்கம் பல நாடுகளில் தேவாலயங்களையும், பள்ளிவாசல்களையும் நிர்மாணித்துத் தந்திருக்கிறது” என்றும் வின்சென்ட் டான் கூறியிருக்கிறார்.

தனது பங்கு நிதியைத் தந்ததோடு நின்று விடாமல் மற்ற சக வணிக நண்பர்களையும் இந்த நிதிக்கு நன்கொடை வழங்க வற்புறுத்தப் போவதாகவும், சமூக ஊடகங்களின் வழியும் தனது கோரிக்கைகளை கொண்டு செல்லப் போவதாகவும் வின்சென்ட் கூறினார்.

இந்த நிதிக்கு நன்கொடை வழங்க விரும்புபவர்கள் “Sun Media Corporation Sdn Bhd” என்ற பெயருக்கு காசோலை எழுதி, அந்தக் காசோலையின் பின்பக்கத்தில் “Save Seafield Temple” எனக் குறிப்பிட்டு அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Lot 6, Jalan 51/217,

46050 Petaling Jaya, Selangor.

இணையம் வழியாக வங்கிக் கணக்கில் அனுப்ப விரும்புபவர்கள் “Sun Media Corporation Sdn Bhd” என்ற பெயரிலான மே பேங் வங்கிக் கணக்கு எண் – 5081 7770 0420 என்ற வங்கிக் கணக்குக்கு (Maybank account No : 5081 7770 0420) அனுப்பலாம். அனுப்பும்போது, கூடுதல் தகவல்கள் பகுதியில் “Save Seafield Temple” என்று குறிப்பிட வேண்டும்.