Home One Line P1 கொவிட்-19: “இரண்டாம் அலைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை!”- ஹிஷாம் ஹம்டான்

கொவிட்-19: “இரண்டாம் அலைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை!”- ஹிஷாம் ஹம்டான்

560
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 தொடர்பாக நாட்டில் 26-வது வழக்காகப் பதிவு செய்யப்பட்டு சுங்கை புலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹிஷாம் ஹம்டான், ஜனவரி மாதம் தனது ஷாங்காய் வருகைக்கும், வைரஸின் நேர்மறையான உறுதிப்படுத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நேற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார்.

உடா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் தலைவரான ஹிஷாம், ஜனவரி 13 முதல் 17 வரை ஷாங்காயில் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டதாகக் கூறினார். ஆனால், இது தொடர்பான முதல் வழக்கு ஜனவரி 20-ஆம் தேதி ஷாங்காயில் பதிவு செய்யப்பட்டது.

ஜனவரி 25-ஆம் தேதி சீனாவுக்கான பயணத்தை ஒத்திவைக்கவோ அல்லது தவிர்க்கவோ சுகாதார அமைச்சகம் மலேசியர்களுக்கு அறிவுரை வெளியிட்டதாகவும், ஜனவரி 30-ஆம் தேதி அனைத்துலக பாதிப்புகளைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் கொரொனாவைரஸ் நிலைமையை பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்தது என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நான் ஷாங்காயிலிருந்து திரும்பிய பிறகு இவை அனைத்தும் நடந்தன” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“இரண்டாவது பிரச்சனை என்னவென்றால், இதுவரை எங்களுக்குத் தெரிந்த அனைத்து அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளும் வைரஸின் அடைகாக்கும் காலம் இரண்டு வாரங்கள் என்பதைக் காட்டுகிறது.”

“நான் ஜனவரி 17-ஆம் தேதி வீட்டிற்கு வந்து பிப்ரவரி 27-ஆம் தேதியன்று அறிகுறிகளைக் கொண்டிருந்தேன், மருத்துவ ஆராய்ச்சியின் அடிப்படையில் – ஷாங்காயில் இருக்கும்போது எனக்கு வைரஸ் வந்திருக்க வாய்ப்பில்லை” என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 28-ஆம் தேதியன்று முதல் நேர்மறையான சோதனை முடிவைப் பெற்றதாகவும், பின்பு, பிப்ரவரி 29-ஆம் தேதியன்று இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் ஹிஷாம் கூறினார்.

“மலேசியாவில் கொவிட் -19 வழக்கின் இரண்டாவது அலை என்னுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது. ஆனால் என்னுடன் இணைத்துப் பேசுவதும், தொற்று என்னிடமிருந்து வந்தது இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்,” என்று அவர் கூறினார்.

நேற்றைய நிலவரப்படி, மலேசியாவில் கொவிட்-19 தொற்றுக்கு பாதிப்புக்கு உண்டானவர்களின் எண்ணிக்கை 83 வழக்குகளை எட்டியதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது. அவர்களில் 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.