கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்றுகள் நாடு முழுவதும் பரவியதைத் தொடர்ந்து, சிலாங்கூரில் உள்ள சுங்கை புலோ மருத்துவமனை தொற்று நோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக உருமாற்றப்பட இருக்கிறது.
சுங்கை புலோ மருத்துவமனை தொற்று நோய்கள் ஆலோசகர் டாக்டர் சுரேஷ்குமார் சிதம்பரம் கூறுகையில், இது தேவையான வசதிகளை உறுதி செய்வதற்காகவும், எதிர்காலத்தில் இம்மாதிரியான சூழ்நிலைகளை கையாளுவதற்காகவும் அவசியம் என்று கூறினார்.
“மருத்துவமனைகளில் படுக்கை பிரச்சனைகள் இருப்பதை நாங்கள் அறிவோம். ஆனால், சுங்கை புலோவில் நாங்கள் படுக்கை பிரச்சனையை சரி செய்து விட்டோம். இந்த மருத்துவமனையில் கொவிட் -19 நோயாளிகளுக்கான படுக்கைகளில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று அவர் கூறினார்.
சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தலைமையில் சுகாதார அமைச்சில் திங்கட்கிழமை நடைபெற்ற மாநாட்டில் டாக்டர் சுரேஷ் இதனை தெரிவித்தார்.
தற்போது, மருத்துவமனையின் நான்காவது மற்றும் ஐந்தாவது தளங்கள் 112 படுக்கைகளைக் கொண்ட கொவிட் -19 நோயாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் 14 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் டாக்டர் சுரேஷ் தெரிவித்தார்.
டாக்டர் நூர் ஹிஷாம் கருத்துப்படி, இரண்டு தளங்களில் இருந்து தற்போதுள்ள துறை அருகிலுள்ள மருத்துவ வசதிக்கு மாற்றப்பட்டது என்றும், இதனால் சுங்கை புலோ மருத்துவமனை கொவிட்-19 வழக்குகள் போன்ற தொற்று நோய்களில் கவனம் செலுத்த முடியும்.
“தொற்று நோய்களுக்கு ஒரு மருத்துவமனையைப் பெற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது, எனவே சுங்கை புலோ மருத்துவமனையை தொற்று நோய்களுக்கான மருத்துவமனையாக மாற்றுவோம். ” என்று சுங்கை புலோவில் தொற்று நோய்களுக்கான மருத்துவமனையாக தற்காலிகமாக இருக்குமா என்று கேட்டதற்கு, நுர் ஹிஷாம் இவ்வாறு கூறினார்.