கோலாலம்பூர்: தற்போது முக்கியமானதாக இருக்கும் இளைஞர்களின் வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் மனிதவள அமைச்சகம் கவனம் செலுத்தும் என்று அதன் புதிய அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
“தற்போது, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நம் நாட்டு இளைஞர்களுக்கு பெரும் போட்டியாக உள்ளனர், இது மிகவும் முக்கியமானதாகும். அமைச்சகம் விரைவில் இதனை கவனிக்க வேண்டும்,” என்று அவர் தனது முதல் நாள் பணியைத் தொடங்கிய சிறிது நேரத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
துணை மனிதவளத்துறை அமைச்சர் அவாங் ஹாஷிம், அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அமீர் உமர் மற்றும் அமைச்சின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தற்போது திருப்திகரமாக இல்லாத, அமைச்சகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்துவதாக சரவணன் கூறினார்.
தொழிலாளர்கள் நலன் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளில் சிறந்த தீர்வைக் காண விவேகமான அணுகுமுறையைப் பயன்படுத்துவதாகவும், அவர்களுடன் பேசுவதாகவும் அவர் கூறினார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த சிறந்த வழியைக் கண்டுபிடிப்பதில் அமைச்சகம் மீது தொழிற்சங்கம் இன்னும் நம்பிக்கையுடன் உள்ளது என்பதற்கான சாதகமான அடையாளத்தை சுட்டிக்காட்டிய தொழிற்சங்கங்களின் செயலாளர் (எம்டியூசி) ஜே.சாலமனுக்கு சரவணன் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, சரவணனின் நியமனம் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யும் என்று எம்டியூசி நம்புகிறது என்றும், அதேபோல் உயிர்வாழ்வதற்கும் வருமான இடைவெளியைக் குறைப்பதற்கும் போராட வேண்டிய ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் துன்பங்களைப் புரிந்துகொள்வதையும் நேற்று செவ்வாய்க்கிழமை சாலமன் மேற்கோளிட்டுள்ளார்.
அமைச்சகம் திட்டமிட்ட அனைத்து திட்டங்களையும் தாம் தொடருவதாகவும், மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பின் மாற்றங்களை செய்ய இருப்பதாகவும் சரவணன் கூறினார்.