Home One Line P1 அரசியல் பார்வை : மொகிதின் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவது அம்னோவா?

அரசியல் பார்வை : மொகிதின் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவது அம்னோவா?

851
0
SHARE
Ad

(பதவியேற்றுள்ள புதிய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையிலான அரசாங்கம் எத்தனை நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கும்? அவரது ஆட்சியை கவிழ்க்கப்போவது, நம்பிக்கைக் கூட்டணியா? மகாதீரா? அல்லது அம்னோவா? தனது கண்ணோட்டத்தில் விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

கோலாலம்பூர் – அப்படி இப்படியென்று மொகிதின் யாசின் தலைமையிலான புதிய அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. ஜசெக இருப்பதால்தான் நம்பிக்கைக் கூட்டணி உடைபடுகிறது எனப் பரவலாக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய ஜசெக தலைவர்கள், மொகிதின் அரசாங்கத்திற்கு எதிராக நேரடியாகக் குற்றச்சாட்டுகள் எதனையும் வைக்கவில்லை.

அப்படி வைத்தாலும், அது மலாய்க்கார பெரும்பான்மை அரசாங்கத்திற்கு எதிரான கருத்து எனக் கொள்ளப்படும் என்பதால் ஒருவேளை ஜசெக மௌனம் சாதிக்கலாம்.

#TamilSchoolmychoice

பிகேஆர் கட்சியின் தலைவர்களும், அமைதி காத்து வருகின்றனர். வான் அசிசா மட்டுமே ஓரிரு பேட்டிகளின் வழி தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

அமானா கட்சியின் தலைவர்களோ தொடர்ந்து “பின்கதவு” அரசாங்கம் என மொகிதின் அமைச்சரவையைத் தாக்கியும், ஜசெகவைத் தற்காத்துப் பேசி வருகின்றனர்.

துன் மகாதீரோ, மொகிதின் தங்களுடைய ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரைக் “கவர்ந்து” அமைச்சுப் பதவிகள் வழங்கி விட்டதால், இனி மொகிதின் அரசாங்கத்திற்கே பெரும்பான்மை இருக்கும் என்றும் அதன் காரணமாக அவரது அரசாங்கம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் சாத்தியம் நிலவுவதாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால், மொகிதின் அமைச்சரவை அமைக்கப்பட்டதிலிருந்து சர்ச்சைக்குரிய கருத்துகளும், சரமாரியாக எதிர்ப்புக் கணைகளும் புறப்பட்டு வருவது அம்னோ தலைவர்களிடமிருந்துதான்! மொகிதின் அரசாங்கத்தை ஆட்டம் காணச் செய்து, கவிழ்த்து, 15-வது பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்கும் “நற்பணியை” செய்யப் போவது அம்னோதான் என்பது அடுத்தடுத்து நடைபெற்றுவரும் சம்பவங்கள், அக்கட்சியின் தலைவர்கள் விடுத்து வரும் அறிக்கைகளிலிருந்து புலப்படுகிறது.

மொகிதின் அரசாங்கத்தை அம்னோ ஏன் கவிழ்க்க வேண்டும்?

அம்னோவின் முதல் வியூகம் நடப்பு நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்ப்பதுதான்!

அதனால் விளையக் கூடிய நன்மை தீமைகளைப் பிறகு பார்த்துக் கொள்வோம் – இப்போதைக்கு அரசாங்கத்தைக் கவிழ்க்க ஆவன செய்வோம் எனத் திட்டம் தீட்டிய நஜிப் துன் ரசாக், சாஹிட் ஹமிடி, இருவருமே அதில் வெற்றி பெற்றுவிட்டார்கள்.

அமைச்சரவை நியமனங்கள் பெரும்பாலும் நஜிப், சாஹிட் ஆதரவாளர்களுக்கே வழங்கப்பட்டிருக்கின்றன.

தவிர்க்க முடியாமல் கைரி ஜமாலுடின் போன்ற ஓரிருவர் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அம்னோ துணைத் தலைவராக இருந்தும், முகமட் ஹாசான் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படாமல் விலக்கி வைக்கப்பட்டிருப்பது அவர் வசம் அரசாங்கப் பதவி போகக் கூடாது என்றும், அவரது கட்சி பலத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனவும் நஜிப், சாஹிட் இருவரும் திட்டமிடுகிறார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

மொகிதின் அம்னோ அமைச்சர்களுக்கு வழங்கியிருக்கும் அமைச்சுப் பொறுப்புகள் மீது பரவலான அதிருப்தியை ஒரு சில அம்னோ தலைவர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

அம்னோவினருக்கு உச்சகட்ட அதிருப்தியைத் தந்திருப்பது, அஸ்மின் அலி துணைப் பிரதமர் என்ற அளவுக்கு அரசாங்கப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதுதான் என்றும் கூறப்படுகிறது.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தைத் திட்டமிட்டபடி வெற்றிகரமாகக் கவிழ்த்து விட்டோம் – ஆனால் அதற்கென்றும் நாம் அன்று தூக்கியெறிந்த மொகிதினை மீண்டும் பிரதமராக்கி அழகு பார்ப்பதற்கும்,

கடந்த 20 ஆண்டுகளாக நம்மை நாள்தோறும் தாக்கி வந்த அஸ்மின் அலியை மொகிதினுக்கு அடுத்த நிலையிலான மூத்த அமைச்சராக – ஏறத்தாழ துணைப் பிரதமராக – ஆதரிக்கவும்தான் நாம் இனி கொடி தூக்கப் போகிறோமா என்ற குமுறல்கள் அம்னோவினரிடையே கேட்கத் தொடங்கியிருக்கின்றன.

அஸ்மின் அலி குழுவினரை அப்படியே பெர்சாத்து கட்சிக்குள் மொகிதின் ஏற்றுக் கொண்டிருப்பதும், அவரது கட்சிப் பலத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

முதலில் துணைப் பிரதமர் நியமனம் இல்லை என்று கூறிய மொகிதின் 4 பேர் கொண்ட மூத்த அமைச்சரவைக்குழு தான் இல்லாத நேரங்களில் அமைச்சரவையை வழிநடத்தும் என அமைச்சரவையை அறிவித்தபோது குறிப்பிட்டார்.

ஆனால், நேற்று புதன்கிழமை தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, தான் இல்லாத நேரங்களில் அஸ்மின் அலி அமைச்சரவையை வழி நடத்துவார் எனக் கூறியிருக்கிறார்.

60 ஆண்டுகாலம் அதிகாரத்தில் அமர்ந்து வலுவுடன் ஆட்சி செய்த அம்னோ இப்படியெல்லாம் இவர்களுக்குக் கீழ்ப்படிந்து அரசியல் செய்வதற்குப் பதிலாக மீண்டும் பொதுத் தேர்தலுக்கு வியூகம் அமைக்கலாம் –

அப்போது பெர்சாத்துவை அப்படியே ஒதுக்கித் தள்ளிவிட்டு பாஸ் கட்சியுடன் இணைந்து – முவாபக்காட் நேஷனல் சித்தாந்த அடிப்படையில் பொதுத் தேர்தலைச் சந்திக்கலாம் –

அப்படிச் செய்தால் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என அம்னோவினர் கணக்குப் போடத் தொடங்கி விட்டனர்.

துணைப் பிரதமர், உள்துறை அமைச்சு, நிதியமைச்சு என முக்கிய அமைச்சுகளைக் குறிவைத்துக் காத்திருந்த அம்னோவினருக்குக் கிடைத்தது ஏமாற்றமே!

அம்னோ தலைவர்களின் கண்டனக் குரல்கள்

அமைச்சரவை அமைக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே அதிருப்திக் குரல்கள் – எதிர்ப்புக் குரல்கள் அம்னோவினரிடம் இருந்து புறப்பட்டு விட்டன.

எனது அமைச்சில் அரசியல் தலையீடு இருக்காது என நிதியமைச்சர் டத்தோ தெங்கு சாப்ரோல் கூற, அதற்கு பதிலடியாக நீங்களே உங்கள் சொந்த அமைச்சை அமைத்துக் கொள்ளுங்கள் – உங்களுக்குக் கிடைத்திருப்பது அரசியல் நியமனம் என்பது உங்களுக்குத் தெரியாதா – எனச் சாடியிருக்கிறார் சபா, கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் பங்க் மொக்தார்.

சபா அம்னோ புதிய அமைச்சரவையில் முறையாகப் பிரதிநிதிக்கப்படவில்லை என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் அம்னோவைச் சேர்ந்த பங்க் மொக்தார்.

கட்சிக்கேற்ற நியாயமான, முறையான பிரதிநிதித்துவம் மொகிதின் அரசாங்கத்தில் இல்லை எனக் கூறியிருக்கிறார் ஜோகூர் பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசாலினா ஒத்மான் சைட். இவர் ஏற்கனவே தேசிய முன்னணி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர்.

புதிய பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணியில் உள்ள மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 28 விழுக்காட்டைக் கொண்டுள்ள பெர்சாத்து இரண்டு மூத்த அமைச்சர்களைக் கொண்டிருக்கிறது.

ஆனால், 35 விழுக்காடு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அம்னோவோ ஒரே ஒரு மூத்த அமைச்சரை மட்டுமே கொண்டிருக்கிறது.

அம்னோவுக்கு முக்கிய அமைச்சுகளும் ஒதுக்கப்படவில்லை எனவும் அசாலினா குறை கூறியிருக்கிறார்.

ஜோகூர்பாரு அம்னோ தொகுதி தலைவர் டான்ஸ்ரீ ஷாரிர் சமாட் நடப்பு அமைச்சரவை தேசிய முன்னணி, பெர்சாத்து, பாஸ் இணைந்த கூட்டணியின் உணர்வைக் கொண்டிருக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அனைவரும் இணைந்து மொகிதினை ஆதரித்தனர், ஆனால், அமைச்சரவை நியமனம் என்று வரும்போது, அனைவரையும் இணைத்துக் கொள்ளும் எண்ணம் பிரதிபலிக்கப்படவில்லை என்றும் ஷாரிர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

31 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையில் 11 பேர் பெர்சாத்து கட்சியையும், 9 பேர் அம்னோவையும் பிரதிநிதிக்கின்றனர். மசீச, மஇகா தலா ஓர் அமைச்சரைக் கொண்டிருக்கிறது.

இந்திலையில் ஆட்சியைக் கவிழ்க்கும் முதல்கட்ட வியூகத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கும் அம்னோ, அடுத்த கட்ட வியூகமாக, பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வியூகத்தைத் திட்டமிடத் தொடங்கி விட்டது என்பது மேற்கூறிய அம்னோ தலைவர்களின் அறிக்கைகள் மறைமுகமாகப் புலப்படுத்துகின்றன.

இந்த அமைச்சரவையையா அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆதரித்துக் கொண்டு நமக்கென அதிகாரம் எதுவும் இல்லாமல் அரசியல் நடத்திக் கொண்டிருக்கப் போகிறோம் என்ற அதிருப்திக் கேள்விகள் அம்னோ வட்டாரத்தில் எழத் தொடங்கி விட்டன.

ஆனால், பாஸ் தலைவர்கள் எந்தவித அதிருப்தியையும் வெளிக்காட்டவில்லை. காரணம், அவர்களைப் பொறுத்தவரை நடப்பு அரசாங்கத்தில் அவர்கள் இடம் பெற்றிருப்பதே மாபெரும் சாதனைதான் என அவர்கள் கருதி, அந்த சாதனையின் வெற்றிக் கொண்டாட்டத்தில் திளைத்திருக்கின்றனர்.

எனவே, பலரும் எதிர்பார்ப்பதைப் போல், மொகிதின் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவது மகாதீரோ, அன்வாரோ, ஜசெகவோ அல்ல!

அதைச் செய்யப் போவது அம்னோதான் என்பது காலப் போக்கில் நிரூபணமாகும்.

அப்படி ஒரு சூழ்நிலை உருவாகும்போது…

தேசிய முன்னணி, பாஸ் இணைந்த கூட்டணி ஒருபுறமும்,

பிகேஆர், ஜசெக, அமானா இணைந்த கூட்டணி ஒருபுறமும் பொதுத் தேர்தலில் மோதும்!

சபா, சரவாக் கட்சிகளும், மற்ற சில உதிரிக் கட்சிகளும் இந்த இரண்டு கூட்டணிகளில் ஏதாவது ஒன்றில் இணைந்து கொள்ளும்.

அநேகமாக, பெர்சாத்து இருதரப்பாலும் கழட்டிவிடப்பட்டு – தனித்து விடப்படும்!

தற்போது சுமார் 36 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது பெர்சாத்து.

அவர்களில் ஒரே ஒருவரைத் தவிர ஏறத்தாழ அனைவருமே மலாய்க்காரர்கள். இன்றைக்கு பெர்சாத்து கொண்டிருக்கும் – மலாய் வாக்குகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட – இந்தத் தொகுதிகளை மீண்டும் வென்றெடுக்க வாய்ப்புள்ள நிலையில் அம்னோவும், பாஸ் கட்சியும் மீண்டும் அந்தத் தொகுதிகளை பெர்சாத்து கட்சிக்கே தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்குமா?

தங்களின் முதுகில் குத்திய துரோகிகளை – 5 ஆண்டுகள் நீடிக்கக் கூடிய ஆட்சியை இரண்டே ஆண்டுகளில் கவிழ்த்த மொகிதின் சார்பு பெர்சாத்து துரோகிகளை – இன்றைய குழப்பத்திற்கெல்லாம் மூல காரணமாக மகாதீரின் தரப்பில் நிற்கும் பெர்சாத்து கட்சியினரை மீண்டும் நம்பாமல் – நம்பிக்கைக் கூட்டணி தனித்தே பொதுத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகும்.

-இரா.முத்தரசன்