Home One Line P1 தொழிற்சங்கவாதி, எழுத்தாளர் ஜி.வி காத்தையா காலமானார் – டத்தோ பத்மாவை எதிர்த்துப் போட்டியிட்டவர்

தொழிற்சங்கவாதி, எழுத்தாளர் ஜி.வி காத்தையா காலமானார் – டத்தோ பத்மாவை எதிர்த்துப் போட்டியிட்டவர்

750
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நீண்ட காலமாக தொழிற்சங்கங்களோடும், அரசியல் கட்சிகளோடும் தொடர்பு கொண்டிருந்த ஜி.வி.காத்தையா தனது 82-வது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) உடல் நலக்குறைவால் காலமானார்.

சமூகப் போராளியாகவும், செயற்பாட்டாளராகவும், எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்த அவர் கடந்த பல ஆண்டுகளாக செம்பருத்தி.காம் மற்றும் மலேசியாகினி தமிழ்ப் பிரிவு போன்ற இணைய ஊடகங்களில் பணியாற்றினார்.

1974-ஆம் ஆண்டு முதல் தெலுக் கெமாங் (தற்போது போர்ட்டிக்சன்) நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று வந்த மஇகாவின் முன்னாள் உதவித் தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான டத்தோ கு.பத்மநாபனை எதிர்த்து 1978 மற்றும் 1982 பொதுத் தேர்தல்களில் ஜசெக சார்பில் போட்டியிட்டவர் காத்தையா. இருப்பினும் அந்த முயற்சிகளில் அவர் தோல்வியடைந்தார்.

#TamilSchoolmychoice

அடுத்தடுத்த பொதுத் தேர்தல்களில் அவர் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சிலாங்கூரின் பத்து ஆராங்கில் 1938-ஆம் ஆண்டில் பிறந்த காத்தையா பத்து ஆராங் தமிழ்ப் பள்ளியில் தொடங்கி, பின்னர் இலண்டன் பல்கலைக் கழகங்களில் தனது உயர்கல்வியைத் தொடர்ந்தார்.

நாட்டின் தொழிற்சங்க இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட அவர், 1964-இல் அகில மலாயா தோட்டச் சிப்பந்திகள் சங்கத்தைத் (AMESU) தோற்றுவித்தவர்களில் ஒருவராவார்.

மறைந்த காத்தையாவின் இறுதிச் சடங்குகள் நாளை வியாழக்கிழமை (19.3.2020) காலை 1100 – பிற்பகல் 130 வரையில் கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும்:

16, Jalan Desa 8/5,

Bandar Country Homes,

48000 Rawang

அதைத் தொடர்ந்து அன்னாரின் நல்லுடல் சுங்கை வே கம்போங் துங்கு  மின்சுடலைக்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.