கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட முதல் நாளான நேற்று புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி சிலாங்கூர் காவல் துறை பாரிய நடவடிக்கையைத் தொடங்கினார்கள்.
குற்றவியல் புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோ பாட்ஸில் அகமட் கூறுகையில், அரசாங்கம் பிறப்பித்த உத்தரவுக்கு இன்னும் சிலர் கீழ்ப்படியவில்லை என்ற புகார் தமக்கு கிடைத்ததாகத் தெரிவித்தார்.
“இன்றிரவு (நேற்று) தொடங்கும் இந்த நடவடிக்கை எந்தவொரு வெளிப்படையான காரணத்திற்காகவும் மக்கள் வீட்டிற்கு வெளியே இல்லாததை உறுதி செய்யும். காவல்துறை அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கும்.”
“இந்த நடவடிக்கை மொத்தம் 16 மாவட்டங்களைக் கொண்ட முழு மாநிலத்தையும் உள்ளடக்கும்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பொதுமக்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், வீடு திரும்புமாறு அறிவுறுத்துவதற்கும் மாவட்ட காவல் துறைத் தலைவர் தங்களது ஒவ்வொரு பகுதியிலும் சாலைத் தடைகளை அமைப்பர் என்று பாட்ஸில் கூறினார்.
“காவல் துறையினர் இன்னும் ஆலோசனை முறைகளைப் பயன்படுத்துவார்கள். ஆலோசனைக்கு இணங்காதவர்களைக் கைதுசெய்து விசாரணை ஆவணங்களைத் திறப்பது உள்ளிட்ட தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க தயங்க மாட்டோம்.”
“தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரம் தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவதாகும்” என்று அவர் விளக்கினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு மக்கள் இணங்கினர் என்று காவல் துறை திருப்தி அடைந்த பின்னரே இந்த நடவடிக்கை முடிவடையும் என்று அவர் கூறினார்.