Home One Line P1 கொவிட் -19 : மிரளவோ அச்சம் கொள்ளவோ, தேவையில்லை – சுகாதார விழிப்புணர்வு மட்டும் போதும்

கொவிட் -19 : மிரளவோ அச்சம் கொள்ளவோ, தேவையில்லை – சுகாதார விழிப்புணர்வு மட்டும் போதும்

817
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கொடிய ஆட்கொல்லி கிருமியான கொரோனா நச்சுயிரி (வைரஸ்)  உலகையே தலைகீழ் மாற்றத்திற்கு ஆட்படுத்தியுள்ளது என்பது உண்மைதான். ஆனாலும், இந்த உயிர்க்கொல்லி கிருமியைக் கண்டு நாம் மிரளவோ அல்லது அச்சப்படவோத் தேவையில்லை.

நம்மை அறிந்தோ அறியாமலோ இயற்கையோடு ஒன்றியும் சுகாதார வாழ்வையும் ஆரோக்கிய உணவு முறையையும் மேற்கொண்டு வரும் நாம், நம் அன்றாட வாழ்வில் மஞ்சளை வெகுவாகப் பயன்படுத்தி வருகிறோம். அதனால், இயல்பாகவே நோய் எதிர்ப்பு ஆற்றல் நம் உடலில் இருக்கிறது என்பது நமக்கெல்லாம் பெரும்பேறாகும்.

ஆனாலும், அண்மைக் காலத்தில் மஞ்சள் பூசிக் குளிக்கும் வழக்கத்தை நம் பெண்கள் அடியோடு கைவிட்டது பெருங்குறைதான். இதன் வெளிப்பாடாகத்தான் சில பெண்களுக்கு மீசை அரும்பி இருப்பதும், ஆண்களைப் போல பெண்களின் கெண்டைக் காலிலும் முழங்கைக்குக் கீழும் முடி வளர்ந்திருப்பதுமான காரணங்கள் என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

இருந்தபோதும், நம் சமையல் முறையான அவியல், பொரியல், மசியல், துவையல் என எந்த வகை உணவாக இருந்தாலும் இயற்கை கிருமிநாசினியான மஞ்சளைப் பயன்படுத்துவதால் நம் உடலில் எப்போதுமே நோய் எதிர்ப்பு ஆற்றல் இருக்கிறது என்பதை எண்ணி நாம் முதலில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

கூடவே, அரசு அறிவித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மதித்து, சுகாதாரத் துறை விடுத்துள்ள மருத்துவ முன்னெச்சரிக்கை விதிமுறைகளையும் பின்பற்றினாலே போதும், கொரோனா கிருமி நம்மை விட்டு வெகுதொலைவிலேயே தள்ளி நிற்கும்.

பெரும்பாலும் சைவ உணவுக்கு முன்னுரிமை அளிக்கும் நம் சமுதாயத்தில் அசைவ உணவுப் பழக்கமும் இணைந்துள்ளது. ஆனாலும், இது குறை காணும் அளவுக்கு இல்லை. ஆட்டின் இறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவைதான் நாம் பெரும்பாலும் சமைத்து உண்ணும் மாமிச உணவுகளாகும்.

ஆடு புல்லையும் தழையையும் மட்டுமே உண்டு வாழும் வீட்டு விலங்கு. அதைப்போல, கோழியும் நாம் நாம் கொடுக்கும் தீவனத்தில் வளரும் பறவை ஆகும். பண்ணைக் கோழியைத் தவிர, வீடுகளில் வளரும் கோழிகள் சில வேளைகளில் கொழுந்துப் புற்களுடன் சிற்சிறு பூச்சிகளையும் புழுக்களையும் கொத்தி உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன.

இருந்தாலும் புற்களின் வேர்களில் வாழும் புழு, பூச்சிகளின் உடலில் கொடிய கிருமிகள் தொற்றுவதில்லை என்பதால், கோழி இறைச்சியும் ஆட்டிறைச்சியைப் போல பாதுகாப்பானதுதான என்ற நம்பிக்கை நம்மிடையே உண்டு.

இந்த இரு இறைச்சி வகையை சமைக்கும்போதில் மணக்க மணக்க மசாலைப் பொருட்களுடன் இஞ்சி, மல்லி உள்ளிட்ட மூலிகைகளையும் சேர்த்து எல்லாவற்றுக்கும் மேலாக மஞ்சளை மறக்காமல் சேர்த்து சமைக்கும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள நம் உடம்பில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு ஆற்றல் குடி கொண்டுள்ளது.

தவிர, இன்றைய உலகை ஆட்டிப் படைக்கும் புதிய ஆட்கொல்லிக் கிருமியான கொரோனா வைரஸ் குழந்தைகளையோ இளைய வயதினரையோ அண்டுவது குறைவு என்றும் வயது முதிர்ந்தவர்களைத்தான் அதிகமாகத் தாக்குகிறது என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே, அந்த வயதினரும் அடிக்கடி கைகளைக் கழுவியும் எந்த நேரமும் கொதிக்க வைத்த நீரைப் பருகியும் பொதுவாக மற்றவர்களுடன் விலகி நின்று பழகி வந்தாலும் கொரோனா கிருமியைத் துரத்திவிட முடியும்.

சீனாவில், வுகான் மத்திய மருத்துவமனையில் பணியாற்றிய லீ வெண் லியாங் என்ற கண் மருத்துவர்தான் இந்த கொரோனா கிருமியைப் பற்றி கடந்த டிசம்பர் மாதத்தில் அச்சம் தெரிவித்தார். ஆனால், அப்போது அது குறித்து பரவலாக அலட்சியம் செய்யப்பட்டதுடன் அம்மருத்துவருக்கு எச்சரிக்கையும் விடப்படது.

கொரோனா வைரஸ் மனிதர்களைத் தொற்றிய நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த டாக்டர் லீ, அதேக் கிருமித் தொற்றுக்கு ஆளாகி கடந்த பிப்ரவரி மாதத்தில் இறக்க நேரிட்டது பெரிய அவலம்.

தற்பொழுது, ஆராய்ச்சியாளர்கள் இந்த நோய்த் தடுப்பிற்கான மருந்தை உருவாக்கி உள்ளதாகவும் இதைக் கொண்டு விலங்குகளில் சோதனை முயற்சி நடைபெறுவதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைத் தெரிவிக்கிறது.
இந்த முயற்சி வெற்றி பெற்றால், இந்த ஆண்டின் பின் பகுதியில் இந்த தடுப்பு மருந்தைக் கொண்டு மனிதர்களுக்கான சோதனையும் மேற்கொள்ளப்படுமாம். அதிலும் வெற்றி கிட்டிய பின்னர்தான் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருத்து தயாரிக்கப்படும். அப்படித் தயாரிக்கப்படும் மருந்து பெரிய அளவில் பயன்பாட்டிற்கு வர 2021-ஆம் ஆண்டின் மையப்பகுதியை எட்டிவிடும் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. இதுகூட நூற்றுக்கு நூறு உறுதி என்ற நிலையும் இல்லை என்ற தகவலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக, நம் உடலை நோய்க்கிருமிகள் தாக்கும்போது, அந்தத் தொற்றுக் கிருமியை எதிர்த்துப் போராடும் ஆற்றல் நம் உடலிலேயே இருக்கிறது. கடந்த காலத்தில் தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, மணல்வாரி அம்மை, பெரிய அம்மை, பிளேக், ஃப்ளூ காய்ச்சல் போன்ற நோய்கள் பரவலாக மனித குலத்தைத் தாக்கியபோது, அந்தந்த கிருமிகளில் இருந்தே நோய்த் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டன.

தற்பொழுது அந்த நடைமுறைக்குப் பதிலாக ‘Pluck & Play’ என்னும் புதிய முறையை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கையாளுகின்றனராம்.

இதைப் பற்றியெல்லாம் நாம் பெரிதாக கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. இந்த நோயிற்கான அச்சம் தீரும்வரை, எந்த இடத்திற்குச் சென்றாலும் தேவையின்றி எந்த இடத்தையும் நாம் தொடக்கூடாது; மனிதர்களுடனான நேரடித் தொடர்பின் மூலம் இந்தக் கிருமி பெரும்பாலும் தொற்றுவதால் மற்றவர்களுடன் கை குலுக்குவதை அடியோடு விட்டுவிட வேண்டும். உள்ளங்கை முகத்தினருகே செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கைகளைக் கழுவாமல் காதுகளைக்கூட சுத்தம் செய்யக்கூடாது.
உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை, வெள்ளரிக்காய், காரட், தேங்காய் அல்லது துருவிய தேங்காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முருங்கைக் கீரைக் கொழுந்து, வேப்பிலைக் கொழுந்து போன்றவற்றை அவரவர் மனதிற்கும் உடலுக்கும் சுவைக்கும் ஏற்றவாறு கொஞ்சம் கொஞ்சமாக உண்டு வருவது நல்லது.

மொத்தத்தில், இந்த நோயைக் கண்டு மிரளுவதற்கோ அஞ்சுவதற்கோ அவசியமே இல்லை. தற்காப்பு நடவடிக்கைகள்தான் முக்கியம்

– நக்கீரன்.