கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொவிட் -19 நோய்த்தொற்று காரணமாக பத்தாவது மரணம் பதிவானது.
பத்தாவது மரண சம்பவமானது 74 வயதான மலேசியரை சம்பந்தப்பட்டதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
“அவர் மார்ச் 8-ஆம் தேதியன்று கொவிட்-19 அறிகுறிகளுடன் இருந்ததால் மார்ச் 13 அன்று பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.”
“மார்ச் 14-ஆம் தேதியன்று கொவிட் -19 நோய்க்கு சாதகமான அறிகுறிகள் அவரிடத்தில் கண்டறியப்பட்டது. மேலும் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு சுவாச உதவிகள் வழங்கப்பட்டன.”
“மார்ச் 22-ஆம் தேதியன்று மாலை 4.05 மணிக்கு அவர் இறந்துவிட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று நூர் ஹிஷாம் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இதே காலகட்டத்தில், நேற்று பிற்பகல் நிலவரப்படி, 123 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது மலேசியாவில் கொவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கையை 1,306-ஆகக் கொண்டு வந்துள்ளது.
நேற்று பதிவான 123 சம்பவங்களில், மொத்தம் 74 சம்பவங்கள் கடந்த மாதம் ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சியுடன் தொடர்புடையவை என்று கண்டறியப்பட்டுள்ளன.