Home உலகம் கொவிட்-19 : உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் பாதிப்புகள் என்ன?

கொவிட்-19 : உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் பாதிப்புகள் என்ன?

489
0
SHARE
Ad

உலகம் முழுவதும் கொவிட்-19 பாதிப்பால் பல நாடுகளில் மக்கள் பிரச்சனைகளை எதிர்நோக்கி வரும் நிலையில், சில நாடுகளின் முக்கிய சம்பவங்கள் பின்வருமாறு :

சிங்கப்பூர் – குறுகிய காலம் தங்குவதற்குப் பயணிகளுக்குத் தடை

உலகின் முக்கிய போக்குவரத்து நாடான சிங்கப்பூரில் இன்று திங்கட்கிழமை இரவு 11.59 மணி முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் குறுகிய காலத்திற்குத் தங்குவதற்கு (டிரான்சிட்) தடை விதிக்கப்படுகிறது.

சிங்கையில் வேலை செய்வதற்கான குடிநுழைவு அனுமதி (விசா) பெற்றவர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினர், சுகாதாரம், போக்குவரத்து போன்ற அத்தியாவசியத் துறைகளில் பணிபுரிபவர்களாக இருந்தால் மட்டுமே நாட்டில் நுழைய அனுமதிக்கப்படுவர்.

கனடா – ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளாது

#TamilSchoolmychoice

எதிர்வரும் ஜூலை மாதத்தில் தோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற இறுதி முடிவை அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் இன்னும் எடுக்காத நிலையில் அந்தப் போட்டிகளில் தாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என கனடாவின் ஒலிம்பிக் மன்றம் அறிவித்திருக்கிறது.

விளையாட்டாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு அடுத்த ஓராண்டுக்கு இந்தப் போட்டிகளை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கனடா ஒலிம்பிக் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஜெர்மனி – அதிபர் ஏஞ்சலா மெர்க்கலும் தனிமைப்படுத்திக் கொண்டார்

யாரையும் விட்டு வைக்காத கொரொனா நச்சுயிரி ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலையும் விட்டு வைக்கவில்லை. கொவிட்-19 பாதிப்புக்குள்ளாகியிருந்த நபர் ஒருவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த காரணத்தால், ஏஞ்சலா மெர்க்கல் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அமெரிக்கா – 400 பேர்கள் மரணம்; 32 ஆயிரம் பேர்கள் பாதிப்பு

நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் (மார்ச் 22) ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே இதுவரையில் 400 பேர் கொவிட்-19 பாதிப்பால் மரணமடைந்துள்ளனர்.

இந்தத் தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இவர்களில் ஏறத்தாழ பாதிப்பேர்கள் – சுமார் 15,168 பேர்கள் – நியூயார்க் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

கொவிட்-19 தீவிரமாகப் பரவும்போது நியூயார்க் மக்கள் தொகையில் 40 முதல் 80 விழுக்காடு மக்களுக்கு அந்தத் தொற்று பரவக் கூடும் என நியூயார்க் மாநில ஆளுநர் அண்ட்ரூ குவோமோ எச்சரித்துள்ளார்.

சீனா – 36 புதிய கொவிட்-19 பாதிப்புகள்; அனைத்தும் வெளிநாட்டுக்காரர்கள்

உலகத்துக்கே கொவிட்-19 நச்சுயிரியை ஏற்றுமதி செய்த சீனா, உள்நாட்டில் இந்தத் தொற்றின் பாதிப்பை முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை (மார்ச் 21) 46 புதிய நோய்த் தொற்றுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) இந்த எண்ணிக்கை 39 ஆகக் குறைந்துள்ளது.

ஆனால், இந்த 39 பேர்களும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடம் காணப்பட்டது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் கொவிட்-19 புதிதாகப் பீடிக்கப்பட்டவர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை.