கோலாலம்பூர்: கொவிட்-19 தொடர்பாக மலேசியாவில் 40-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவான பகுதிகள் அல்லது மாவட்டங்களை சுகாதார அமைச்சகம் சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்துவதை உறுதி செய்வதாக சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
“சிவப்பு மண்டலமாகப் பெயரிடப்பட்ட பகுதி 40 சம்பவங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட பதிவுகளைக் கொண்டுள்ளது”
“மாநில சுகாதார அலுவலகம் அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளைக் கண்டறியும் . இதில் எந்தெந்த பகுதிகள் சம்பந்தப்பட்டுள்ளன என்பதை அறிந்தவுடன் நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்போம்” என்று அவர் கூறினார்.
கொவிட்-19 பாதிப்பின் விளைவாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி வரை (மார்ச் 22), நாடு முழுவதும் ஆறு பகுதிகள் சிவப்பு மண்டலப் பகுதிகளாக முத்திரை குத்தப்பட்டன.
சிவப்பு மண்டலப் பகுதிகள் என பெயரிடப்பட்ட பகுதிகள் கீழ்வருமாறு:
பெட்டாலிங் ஜெயா (96 சம்பவங்கள்)
லெம்பா பந்தாய் (90 சம்பவங்கள்)
உலு லங்காட் (75 சம்பவங்கள்)
ஜோகூர் பாரு (52 சம்பவங்கள்)
சிரம்பான் (42 சம்பவங்கள்)
திதிவாங்சா (40 சம்பவங்கள்)