சென்னை, ஏப். 10- உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள், அந்த நாட்டின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து உடனுக்குடன் அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதை நடைமுறையாக கொண்டுள்ளன.
தூதரகங்களுக்கும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க தலைமையகத்துக்கும் இடையே மிக, மிக ரகசியமாக நடந்து வந்த இந்த தகவல் பரிமாற்றத்தை `விக்கிலீக்ஸ்’ என்ற இணையத்தளம் அம்பலப்படுத்தியது.
ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் எந்தெந்த விஷயங்களில், எப்படி நடந்து கொண்டனர் என்பவை எல்லாம் விக்கிலீக்ஸ் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அந்த வரிசையில் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளிடம் 1980, 1990களில் விடுதலைப்புலிகள் எத்தகைய செல்வாக்கு பெற்றிருந்தனர், இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்ற பிறகும், அதன் பிறகும் விடுதலை புலிகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி பற்றி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்களை தற்போது விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதமும், 2009-ம் ஆண்டு மார்ச் மாதமும் அனுப்பப்பட்ட தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
அதில், விடுதலைப் புலிகள் விஷயத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் எப்படி மாறுபட்ட வகையில் செயல்பட்டனர் என்று விரிவாக கூறப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதர் ஆண்ட்ரூ டி சிம்கின் அனுப்பிய தகவல் தொகுப்பில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி புகழ்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் அனுப்பிய தகவலில் கூறப்பட்டிருந்ததாவது:-
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் முதல்- அமைச்சராக பொறுப்பு ஏற்ற ஜெயலலிதா, தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளை ஒடுக்க உத்தரவிட்டார். அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் வெளிப்படையாக செயல்பட்டு வந்தனர்.
இது தொடர்பாக தமிழக காவல் துறையில் மிக உயரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் கூறுகையில், `என்ன ஆனாலும் சரி… தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளை முற்றிலும் ஒடுக்க எங்களுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தேவைப்பட்டால் விடுதலைப்புலிகளை அழிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்” என்றார். இதை வைத்து பார்க்கும் போது ஜெயலலிதா இரும்பு பெண்மணியாக திகழ்வது தெரிகிறது. அவரது துணிச்சலான, உறுதியான நடவடிக்கைகளால்தான் தமிழ் நாட்டில் நீண்ட காலமாக இருந்த விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இவ்வாறு அந்த தகவல் தொகுப்பில் கூறப்பட்டு இருந்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றியும் சென்னை தூதரகம் சில தகவல்களை வாஷிங்டனுக்கு அனுப்பி இருந்தது. அதையும் விக்கி லீக்ஸ் வெளியிட்டு இருக்கிறது. அதில் விடுதலைப்புலிகள் மீதான பயம் காரணமாகவே, கருணாநிதி அந்த அமைப்பை ஆதரித்தார் என்ற சந்தேகம் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. மேலும் கருணாநிதியின் விடுதலைப்புலி ஆதரவு நிலை எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக சென்னை தூதரகம் தகவல் அனுப்பியது தெரிய வந்துள்ளது.