வாஷிங்டன் : உலகின் அதிநவீன மருத்துவ வசதிகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றான அமெரிக்காவே இன்னொரு இத்தாலியாக உருமாறலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரையில் சுமார் 65 ஆயிரம் பேர்கள் கொவிட்-19 பாதிப்புக்குள்ளாகியிருக்கும் வேளையில் மரண எண்ணிக்கை 921-ஐத் தாண்டியுள்ளது.
கும்பல் கும்பலாக மக்கள் அமெரிக்க மருத்துவமனைகளை, பரிசோதனைகளுக்காகவும், சிகிச்சைகளுக்காகவும் முற்றுகையிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற சமையல் நிபுணரான புளோய்ட் கார்டோஸ் என்பவர் கொவிட்-19 பாதிப்பால் நியூ ஜெர்சியில், தனது 59-வது வயதில் மரணமடைந்ததும் அமெரிக்காவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.
அமெரிக்கா-கனடா நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் மூடப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பயணங்களுக்கு மட்டுமே வாகனங்களுக்கு அனுமதிகள் வழங்கப்படுகின்றன.
கொவிட்-19 பாதிப்புகளை முன்னிட்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 டிரில்லியன் (2 ஆயிரம் பில்லியன்) அமெரிக்க டாலர் பொருளாதார சலுகைகளை அறிவித்திருக்கிறார்.
மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நியூயார்க்
அமெரிக்காவிலேயே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக நியூயார்க் திகழ்கிறது. அதிக மக்கள் தொகை கொண்ட, நெரிசலான மக்கள் நடமாட்டத்தைக் கொண்ட நகர் என்பதால், பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதுவரையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று புதன்கிழமை வரை 30,811 என மதிப்பிடப்படுகிறது. செவ்வாய்க்கிழமையிலிருந்து புதன்கிழமைக்குள் இந்த எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
285-க்கும் மேற்பட்டோர் நியூயார்க்கில் மட்டும் மரணமடைந்துள்ளனர்.
கொவிட்-19 பாதிப்புகள் குறித்து விளக்கமளித்த சுகாதார அதிகாரிகள் நியூயார்க்கில் தற்போது 4 ஆயிரம் சுவாச உதவி இயந்திரங்கள் (ventilators) மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாகவும், தங்களுக்கு மேலும் 30 ஆயிரம் சுவாச உதவி இயந்திரங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர்.
புதிதாக 7 ஆயிரம் சுவாசக் கருவிகள் வாங்கப்பட்டிருக்கும் நிலையில் மேலும் 4 ஆயிரம் சுவாசக் கருவிகளை மத்திய அரசாங்கம் அனுப்பி உதவியுள்ளது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
நியூயார்க்கில் இதுவரையில் 3,800 பேர்கள் கொவிட்-19 தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 888 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.