கோலாலம்பூர்: கொவிட் -19 சம்பவங்களுக்கான மலேசியாவில் உள்ள வெப்ப பகுதிகளின் பட்டியலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தீபகற்பத்தில் 11 இடங்களும், சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் தலா ஓர் இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது குறித்து தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 41 அல்லது அதற்கு மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் -19 சம்பவங்கள் உள்ள எந்தவொரு பகுதியும் வெப்ப பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீபகற்பத்தில், சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான வெப்ப பகுதிகள் உள்ளன. பெட்டாலிங் ஜெயாவில் 167 சம்பவங்கள், ஹுலு லங்காட் 132 மற்றும் கோம்பாக்கில் 53 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதைத் தொடர்ந்து கோலாலம்பூர், லெம்பா பந்தாய் பகுதியில் 167 சம்பவங்கள் மற்றும் திதிவாங்சாவில் 49 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
பேராக்கில் இரண்டு வெப்ப பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஹுலு பேராக் (48) மற்றும் கிந்தா (41). நெகிரி செம்பிலானில், சிரம்பானில் 78 சம்பவங்களும், ஜோகூரில், ஜோகூர் பாரு (68), குலுவாங்கில் (54) சம்பவங்களும் பதிவாகி உள்ளன.
சபா தாவாவ்வில் 49 சம்பவங்களுடன் ஒரு வெப்ப பகுதி உள்ளது, சரவாக் கூச்சிங்கில் 45 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, கொவிட் -19 சம்பவங்களில் அசாதாரணமான அதிகரிப்பைத் தொடர்ந்து, ஜோகூர் சிம்பாங் ரெங்காமில் இரண்டு கிராமங்களில் இன்று நள்ளிரவு (மார்ச் 27) தொடங்கி அரசாங்கம் தடை கட்டுப்பாட்டை விதித்தது. சுமார் 3,500 குடியிருப்பாளர்கள் எல்லா நேரங்களிலும் வீட்டிலேயே இருக்கும்படி கூறியதுடன், அனைத்து வணிக நடவடிக்கைகளும் மூட உத்தரவிடப்பட்டன.