ஏப்ரல் 10 – ‘ஆட்சியில் அமர்ந்த 100 நாட்களுக்குள் மலேசியாவில் நாடற்றவர்களாக வாழ்ந்து வரும் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்’ என்று இன்னும் ஆட்சிக்கு வராத பக்காத்தான், தங்கள் தேர்தல் அறிக்கையில் முதல் வாக்குறுதியாக குறிப்பிட்டிருக்கின்றது.
ஆனால், கடந்த 56 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்து, தற்போது 13 ஆவது பொதுத் தேர்தலையும் சந்திக்கப்போகும் தேசிய முன்னணி அரசு, கடந்த சனிக்கிழமை வெளியிட்ட தங்களது தேர்தல் அறிக்கையில் அதுபற்றி ஒரு சிறு குறிப்பு கூட வரையாதது மிகவும் வருத்தமளிக்கிறது.
தேசிய முன்னணியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முன்னிலையில், 13 ஆவது பொதுத் தேர்தல் அறிக்கையை மிகவும் கோலாகலமான முறையில் வெளியிட்ட பிரதமர் நஜிப், அதே அளவு சந்தோசத்தை நாட்டில் வாழும் நாடற்ற மக்களுக்கு கொடுக்கத் தவறிவிட்டார் என்பதே உண்மை.
நாட்டில் 300,000 மேற்பட்ட மக்கள் நாடற்றவர்களாக வாழ்ந்து வரும் நிலையில், கடந்த வாரம் வெறும் 120 பேருக்கு நீல நிற அடையாள அட்டைகளை வழங்கியது தான் தேசிய முன்னணி அரசின் சாதனையா?
மலேசிய மண்ணில் பிறந்து, தோட்டப் புறங்களில் கடுமையாக உழைத்து, இந்நாட்டை செம்பனையும், பால் மரமும் சூழ்ந்த ஒரு பசுமை தேசமாக உருவாக்கிய எத்தனையோ தோட்டத் தொழிலாளர்கள், ஆண்டுக் கணக்கில் இந்த நாட்டில் இருந்தும், மலேசியர்கள் என்ற ஓர் அங்கீகாரம் இன்றி, சொந்த நாட்டில் அந்நியர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்கள் தங்கள் தள்ளாத வயதிலும் ஏங்குவது மலேசியக் குடிமகன் அல்லது குடிமகள் என்ற ஒரு அங்கீகாரத்திற்கு மட்டுமே.
ஆனால் அவர்களின் உணர்வுகளின் மீது சிறு அக்கறையுமின்றி, சம்பந்தப்பட்ட அடையாள அட்டை வழங்கும் அலுவலகங்களில் “இந்த வயதில் உங்களுக்கு எதற்கு அடையாள அட்டை?” என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்?
இதைத் தவிர, நாடற்றவர்களாக வாழும் இம்மக்களின் வாரிசுகள் தகுந்த பிறப்புப் பத்திரம் இன்றி, பள்ளிகளிலும் சேர முடியாமல்,அரசு தரும் சலுகைகளையும் பெற முடியாமல் தவிக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக, 49,000 த்திற்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகள் இந்நாட்டில் தகுந்த ஆவணங்கள் இன்றி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் நிலை தான் என்ன? எதிர்காலத்தில் அவர்கள் திருடர்களாகவும், சமூக விரோதிகளாகவும் உருவாவதைத் தான் இந்த அரசு விரும்புகிறதா?
சபாவில் அத்து மீறிக் குடியேறியவர்களுக்கு அரசியல் காரணங்களுக்காக தாராளமாக அடையாள அட்டைகளை வாரி வழங்கிய தேசிய முன்னணி அரசு, நாட்டில் வாழும் நாடற்றவர்களின் பிரச்சனைகளில் இன்னும் பாராமுகம் காட்டுவது ஏன்?
பசியோடு காத்திருக்கும் மக்களுக்கு வெறும் வாக்குறுதிகளையும், திட்டங்களையும் மட்டும் அளித்தால் போதுமா? அது அவர்களை போய் சேரவும் வழி செய்வதே ஒரு உண்மையான அரசாங்கத்தின் கடமையாகும்.
ஒரு நாட்டில், குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு மேற்பட்ட மக்கள், தேர்தலில் ஓட்டுப் போடவில்லை என்றால் அதை அந்நாட்டிற்கு ஏற்படும் மிகப் பெரிய அவமானமாக உலக நாடுகள் கருதுகின்றன.
ஆனால் நமது மலேசியாவில் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும், நாடற்றவர்களாக கருதப்படும் ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள் ஒட்டு போடுவதே இல்லையே அதை ஏன் அரசாங்கம் அவமானமாக எண்ணுவதில்லை? அவர்களுக்கு ஏன் ஒரு நிரந்தரத் தீர்வு காண முன்வரவில்லை?
நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றுக்கேற்ற திட்டங்களை வகுப்பதே சிறந்த அரசாங்கம் ஆகும்.
எனவே, நஜிப் அவர்களே!
காலங்காலமாய் தொடர்ந்து வரும் இந்த சமூகப் பிரச்சனைக்கு ஒரு உடனடி தீர்வு காண என்ன வழி செய்யப் போகிறீர்கள்?
உங்கள் தேர்தல் அறிக்கையில் இந்தப் பிரச்சனைக்கு இடமே இல்லையா?
நாடற்றவர்கள்தான் வாக்களிக்க போவதில்லையே, பின்னர் அவர்களைப் பற்றி நாம் ஏன் கவலைப் பட வேண்டும் என உங்களின் அரசியல் ஆலோசகர்கள் எண்ணியிருக்கலாம்.
ஆனால் அவ்வாறு நாடற்றவர்களாக கஷ்டப்படும் நபர்களின் குடும்பங்களில் பலர், வாக்காளர்களாக இருக்கின்றனர் என்பதையும், எல்லாவற்றையும் விட ஒட்டுமொத்த இந்திய வாக்காளர்களும் இந்த பிரச்சனையை ஒரு முக்கிய சமுதாயப் பிரச்சனையாகக் கவனித்து வருகின்றனர் என்பதையும், ஏனோ தேசிய முன்னணி தலைமைத்துவம் மறந்துவிட்டது.
இதன் தாக்கம் – பொதுத் தேர்தலில் நிச்சயம் பிரதிபலிக்கும் – அதனால் தேசிய முன்னணிக்கு கிடைக்கக் கூடிய இந்திய வாக்குகள் கிடைக்காமல் போகலாம்.
– பீனிக்ஸ்தாசன்