கோலாலம்பூர்: ஆர்டிஎம்மின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு தமது வாழ்த்துச் செய்தி படத்தில் தமிழ் மொழியைப் பயன்படுத்திய மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனின் வாழ்த்துச் செய்திப் படம் சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்குள்ளானது.
இதனிடையே இந்த விவகாரத்தை மஇகா இளைஞர் பிரிவு தற்காத்துப் பேசியுள்ளது.
இம்மாதிரியான அற்பமான விஷயங்களில் அரசியலை நுழைக்க வேண்டாம் என்று அப்பிரிவின் தலைவர் ஆர்.தினாளன் வலியுறுத்தியுள்ளார்.
“கொவிட் -19 பாதிப்பின் சவாலை மக்களும் நாடும் எதிர்கொள்வதால், அற்பமான முறையில் இந்த விவகாரத்தில் அரசியலை நுழைக்க வேண்டாம்” என்று அவர் கூறினார்.
மனிதவளைத்துறை அமைச்சின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த வாழ்த்துச் செய்தி படத்தைக் குறிப்பிடுகையில், அது மலாய் மொழியில் உள்ள வாழ்த்தினை, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் இந்த வாழ்த்துச் செய்தி குறித்து எழுந்தன.
“மலாய் மொழிக்கு முன்னுரிமை வழங்கி, தமிழ் மொழியை அதன் நேரடி மொழிபெயர்ப்பாகவே மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.”
“மலேசிய கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதற்காக, மனிதவள அமைச்சரின் அலுவலகத்திற்கு இந்த விஷயத்தில் எந்த நோக்கமும் இல்லை என்பது தெளிவாகிறது” என்று அவர் இன்று தமது முகநூல் பதிவில் தெரிவித்தார்.