புத்ரா ஜெயா – இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) வரையிலான கொவிட் – 19 பாதிப்புகள் மலேசியாவில் 3,662 ஆக உயர்ந்துள்ளன. புதிதாக 179 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்ட வேளையில் மேலும் 4 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 61 ஆக அதிகரித்திருக்கிறது.
இந்தத் தகவல்களை வெளியிட்ட சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம், அதே வேளையில் மேலும் 90 பேர்கள் குணமடைந்து இல்லம் திரும்பியதாகவும், இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,005 என்றும் தெரிவித்தார்.
99 பேர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 48 பேர்களுக்கு சுவாசக் கருவிகள் தேவைப்படுகின்றன.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 179 பாதிப்புகளில் 46 பேர்கள் ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசல் நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது.