கோலாலம்பூர்: குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் புசியா சல்லேவுக்கும் பிரதமர் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் உதவி நிதி கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை இணையப்பக்கத்தில் சரிபார்த்த போது தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து தாம் அதிர்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.
இதற்காக தாம் எந்தவொரு விண்ணப்பமும் செய்யவில்லை என்றும், தாம் பந்துவான் சாரா ஹிடுப் பெறுபவரும் இல்லை என்றும் அவர் விளக்கினார். இம்மாதிரியான பிழைகள், உதவிப் பெற தகுதியற்றவர்களுக்கு நிதிகள் தவறாக அனுப்பப்படலாம் என்று அவர் கவலை தெரிவித்தார்.
“நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் பிரதமரின் மனைவி மற்றும் பிபிஎன் ஒப்புதல் பெற்ற முன்னாள் துணை அமைச்சர்கள் பற்றிய செய்திகள் வெளிவந்த பின்னர், நானே சரிபார்த்தேன்”
“இதுபோன்ற உதவிகளைப் பெற நானும் தேர்வு செய்யப்பட்டது என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.”
“நான் பிஎஸ்எச் பெறுபவர் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒருபோதும் பிபிஎன் உதவி நிதிக்கு விண்ணப்பிக்கவில்லை” என்று முன்னாள் துணை அமைச்சருமான அவர் கூறினார்.
முன்னதாக, மலேசியாகினி உள்நாட்டு வருமான வரித்துறை இணையத்தளத்தில் தேடியதில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோரின் பெயர் இடம் பெற்றிருந்ததை வெளியிட்டிருந்தது.