புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின், இன்று திங்கட்கிழமை (ஜூன் 28) முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு நிதி உதவித் திட்டங்களை அறிவித்தார்.
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான நிதி உதவித் திட்டமும் அதில் அடங்கும். அந்த நிறுவனங்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும். இந்தப் பணம் செப்டம்பரில் 500 ரிங்கிட்டும், நவம்பரில் 500 ரிங்கிட்டும் என இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.
பிரிஹாத்தின் உதவித் திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு மேலும் 500 ரிங்கிட் கூடுதலாக வழங்கப்படும். ஜூலை மாதம் முதற்கொண்டு இந்தத் தொகை வழங்கப்படும்.
இதற்காக 5.1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார்.
1 ஜிபி கொள்ளளவு இணையப் பயனீடு இலவசம்
அந்த அறிவிப்பின்படி முக்கிய அம்சங்களில் மற்றொன்று, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி என்ற கொள்ளளவு கொண்ட இணையப் பயனீட்டை இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க முன்வந்திருக்கின்றன என்பதாகும்.
இந்த இலவச இணையப் பயனீடு இந்த ஆண்டின் இறுதி வரை தொடரும் என்றும் மொகிதின் யாசின் அறிவித்தார். இதன் மொத்த மதிப்பு சுமார் 500 மில்லியன் ரிங்கிட்டாகும். இதன் மூலம் சுமார் 44 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனீட்டாளர்கள் பயன்பெறுவர்.
ஊழியர் சேமநிதியிலிருந்து சேமிப்பை மீட்கலாம்
அந்த நிதி உதவித் திட்டத்தின் கீழ் ஊழியர் சேமநிதி வாரிய சேமிப்பிலிருந்து அதன் வாடிக்கையாளர்கள் 5 ஆயிரம் ரிங்கிட் வரை மீட்கலாம் என மொகிதின் யாசின் அறிவித்தார். மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரிங்கிட் என்ற அளவில் 5 மாதங்களுக்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் ரிங்கிட்டை தங்களின் சேமிப்பில் இருந்து பொதுமக்கள் மீட்டுக் கொள்ளலாம்.
மின்சாரக் கட்டணங்கள் கழிவு
பிரதமர் அறிவித்த மீட்சித் திட்டத்தின் மற்றொரு அம்சம் மின்சாரக் கட்டணங்களில் கழிவாகும். அதன்படி இல்லங்கள், தொழில்களுக்கான மின்சாரக் கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. 5 விழுக்காடு முதல் 40 விழுக்காடு வரை மின்சாரக் கட்டணங்களில் கழிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
200 கிலோவாட் மின்சாரத்திற்கும் குறைவாகப் பயன்படுத்துபவர்களுக்கு 40 விழுக்காடு கழிவு வழங்கப்படும்.201 முதல் 300 கிலோவாட் வரையிலான பயன்பாட்டைக் கொண்டவர்களுக்கு 15 விழுக்காடு கழிவு தரப்படும்.
ஜூலை மாதம் முதல் இந்தப் புதிய விகிதங்கள் அமுலுக்கு வரும்.
அதே வேளையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பேரங்காடிகள், தங்கும் விடுதிகள் (ஹோட்டல்கள்) உல்லாசப் பூங்கா மையங்கள் ஆகியவற்றுக்கு 10 விழுக்காடு கழிவுகள் மின்கட்டணத்தில் தரப்படுகின்றன.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களுக்கு இந்த மின்கட்டணக் கழிவுகள் நீட்டிக்கப்படும்.
பிடிபிடிஎன் கடன் 3 மாதங்களுக்கு ஒத்தி வைப்பு
இன்று அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் பிடிபிடிஎன் எனப்படும் கல்விக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு 3 மாத கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து பிடிபிடிஎன் கடன் பெற்றவர்கள் 3 மாதங்கள் வரை தாங்கள் செலுத்தி வந்த மாதாந்திரத் தொகையை ஒத்தி வைத்துக் கொள்ளலாம்.
வங்கிக் கடன் நீட்டிப்பு
இந்த மீட்சித் திட்டத்தின் மற்றொரு முக்கிய அங்கமாக அனைத்து தரப்பு மக்களுக்குமான வங்கிக் கடன் நீட்டிப்புத் திட்டம் பார்க்கப்படுகிறது.
முன்பு பி-40 எனப்படும் அடிமட்ட 40 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த வங்கிக் கடன் நீட்டிப்புத் திட்டம் தற்போது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
வங்கிகளுடனான பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இந்த திட்டம் விரிவாக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
கார், வீடுகள் மீதான வங்கிக் கடன்களை அடுத்த 6 மாதங்களுக்கு செலுத்தாமல் இருக்க கடன் பெற்றவர்கள் வங்கிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
எதிர்வரும் ஜூலை 7 முதல் இதற்கான விண்ணப்பங்களை கடன் பெற்றவர்கள் சமர்ப்பிக்கலாம். இதற்காக எந்தவித ஆவணங்களும் வங்கித் தரப்பில் கோரப்படாது. நிபந்தனைகளும் விதிக்கப்படாது.
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவுடன் உடனடியாக வங்கிகள் இயல்பாகவே வங்கிக் கடன் நீட்டிப்புக்கான ஒப்புதலை வழங்குவார்கள்.