Home One Line P2 சிறு, நடுத்தர வணிகங்களுக்காக 110 பில்லியன் பொருளாதார ஊக்கத் திட்டத்திற்கு மைக்கி நன்றி

சிறு, நடுத்தர வணிகங்களுக்காக 110 பில்லியன் பொருளாதார ஊக்கத் திட்டத்திற்கு மைக்கி நன்றி

956
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “கடந்த மார்ச் 27-ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட ‘பந்துவான் பிரிஹாதின் நேஷனல்’ பொருளாதார ஊக்கத் திட்டத்தில் 100 பில்லியன் ரிங்கிட்டை சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்காக அறிவித்திருந்த நிலையில்,  சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான கூடுதல் பொருளாதார ஊக்கத் திட்டத்தை பிரதமர் மொகிதின் யாசின் தற்போது அறிவித்திருக்கிறார். கூடுதலாக 10 பில்லியன் ரிங்கிட் உதவித் தொகையை சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்காக அரசாங்கம் அறிவித்தது கண்டிப்பாக மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மைக்கி இதனை வரவேற்கிறது” என்று மைக்கி எனப்படும் மலேசிய இந்திய தொழிலியல் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் (படம்) தெரிவித்தார்.

அனைத்து வியாபாரிகளுக்கும் இருக்கும் பிரச்னை, வியாபாரம் செய்யாவிட்டாலும் நிலையான செலவுகளான பணியாளர்களுக்கான ஊதியம், வாடகை செலவு, மின்சார செலவு மற்றும் பலவிதமான செலவுகளை கண்டிப்பாக ஏற்க வேண்டிய கட்டாய நிலையில் அவர்கள் இருப்பதாகும். குறைந்தபட்சம் இந்த சுமைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் முனைப்புக் காட்டவேண்டும் என மைக்கி, கடந்த 31 மார்ச் 2020 நடைபெற்ற நிதியமைச்சருடனான வீடியோ சந்திப்பு கூட்டத்தில் மற்ற அமைப்புகளுடன் இணைந்து அரசாங்கத்திற்கு வலியுறுத்தியிருந்தது.

#TamilSchoolmychoice

“அதன் தொடர்ச்சியாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் பிரச்சனைகளுக்கு செவி சாய்த்து, 4,000 ரிங்கிட் மற்றும் அதற்கும் குறைவாக சம்பாதிக்கும் உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு ஊதிய மானிய உதவி வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.  இதனால், சுமார் 4.8 மில்லியன் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதலாளிகள் அவர்களுடைய தொழிலாளர்களுடன், இந்த கொவிட்-19 காலங்களில் சுமுக பேச்சுவார்த்தைகள் மூலம் சம்பள குறைப்பு, மாத விடுப்பு ஆகியவ அம்சங்களைக் கலந்தாலோசித்து முடிவெடுக்கும்படி அரசாங்கம் ஆலோசனை கூறியுள்ளதும் பாராட்டுக்குரியது” என்றும் கோபாலகிருஷ்ணன் இதன் தொடர்பில் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய சிறு தொழில் வணிகர்கள் அரசாங்கம் அறிவித்திருக்கும் தெக்குன் மற்றும் பி.எஸ்.என் வட்டியில்லாக் கடனுதவித் திட்டத்தில் பயன்பெறுமாறு மைக்கி அறிவுறுத்துகிறது. இத்திட்டத்திற்க்காக 700 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதி வாய்ந்த சிறு தொழில் வணிகர்களுக்கு 3,000 மதிப்புள்ள அரசாங்க சிறப்பு மானியமும் காத்திருக்கிறது.

“வாடகை செலவு ஒரு பெரும் செலவு ஆகும். ஆகையால் இந்த கொவிட்-19 காலங்களில் அரசாங்க நிறுவனங்களின் கீழ் வாடகைக்கு உள்ள கடைகளுக்கு குறைந்த பட்சம் 3 மாத விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் துறைகளும் இதைப் பின்பற்றினால், வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பதும் பாராட்டுக்குரியது” என்றும் கோபாலகிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 31 வரை வெளிநாட்டு தொழிலாளர்களின் அனுமதி (லேவி) கட்டணம் 25 விழுக்காடு தள்ளுபடி அளித்திருப்பதும் வணிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் கூறினார். இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் அனைத்து மானிய திட்டத்திற்கும் இந்திய வணிகர்கள் விண்ணப்பிக்கவேண்டும் என்று மைக்கி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது. உங்களுக்கு உதவிட மைக்கி என்றும் உறுதுணையாக நிற்கும் என்று கோபாலகிருஷ்ணன் நினைவுபடுத்தினார்.

இறுதியாக மைக்கியின் கோரிக்கைகளை தக்க தருணத்தில் அரசாங்கத்திடம் எடுத்து சென்ற நாடாளுமன்ற மேலவைத் தலைவரும், மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களுக்கும், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ மு.சரவணன் அவர்களுக்கும் மைக்கி மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதாக தெரிவித்தார்.