ஷா அலாம்: கொவிட்-19 பாதிப்பிற்குப் பிறகு சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்ட சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் வசிப்பவர்கள் கொவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த பரிசோதனை நடத்தப்படும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.
இந்த பாதிப்பைக் கையாள சிறப்பு பணிக்குழுவை வழிநடத்தும் டாக்டர் சுல்கிப்ளி கூறுகையில், அவர்கள் இருப்பிடம், வயது மற்றும் சுகாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறினார்.
“நாங்கள் எங்களால் முடிந்தவரை பரிசோதிக்க விரும்புகிறோம், ஆனால் எங்கள் நிதி குறைவாகவே உள்ளது, எனவே எங்கள் கணக்கீடுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதிகளை குறிவைக்கிறோம். பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஆபத்தில் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்களை நாங்கள் தேர்ந்தெடுப்போம்” என்று அவர் கூறினார்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட இடங்கள் குறித்து சுல்கிப்ளி வெளியிடவில்லை.
ஏப்ரல் 9 -ஆம் தேதி நிலவரப்படி, சிலாங்கூரில் 1,118 கொவிட் -19 நேர்மறை சம்பவங்களும் ஆறு இறப்புகளும் பதிவாகி உள்ளன.
நாட்டின் 10 முக்கிய சிவப்பு மண்டலங்களில் ஐந்து சிலாங்கூரில் உள்ளன: உலு லங்காட், பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக் மற்றும் சிப்பாங ஆகியவையே அந்தப் பகுதிகளாகும்.
ஏப்ரல் 8-ஆம் தேதி சிலாங்கூர் அரசாங்கம் வெள்ளிக்கிழமை முதல் அடையாளம் காணப்பட்ட பல இடங்களில் பரிசோதனை (கொவிட் -19) நடத்தப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்திருந்தார்.