கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பைத் தடுப்பதற்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு, திரைப்பட ஊக்கத்தொகையாக (ஐடிஎப்சி) 1.32 மில்லியன் ரிங்கிட்டை வழங்குவதாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சகம் அறிவித்தது.
அதன் அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா கூறுகையில், மலேசியாவின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (பினாஸ்) முன்மொழிவுக்கு இந்த உதவி வழங்கப்படுவதாகக் கூறினார். உள்ளூர் திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரிக்க திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உதவுவதையும் ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
“எனவே, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு உயர் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, பல தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு இந்த நிதியை வழங்க நான் ஒப்புக்கொள்கிறேன். பினாஸ் நிர்வாகம் எதிர்காலத்தில் குறிப்பிட்ட நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளும், ”என்று அவர் இன்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த ஊக்கத்தொகை நாட்டின் கலைஞர்கள் தங்கள் திரைப்படங்களை உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தொடர்ந்து வெளியிடவும் சந்தைப்படுத்தவும் உதவும் என்று அவர் நம்புவதாகக் கூறினார்.