புத்ரா ஜெயா – நாட்டில் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 18) நண்பகல் 12.00 மணி வரையில் புதிதாக கொவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 மட்டுமே என்ற செய்தி பொதுமக்களையும், அரசாங்கத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
எனினும், கொவிட்-19 எதிரான போராட்டங்கள் இன்னும் முடியவில்லை என்றும் மேலும் தீவிரத்துடன் தொடரும் என்றும் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
நேற்று 69 -ஆக இருந்த புதிய பாதிப்புகள் இன்று 54 ஆகக் குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,305 ஆக உயர்ந்திருக்கிறது.
இன்னும் மருத்துவமனைகளில் 2,115 பேர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,102 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 135 பேர்கள் முழுமையாக குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர்.
எனினும் இன்று மட்டும் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கைய நாடளாவிய நிலையில் 88 ஆக உயர்ந்திருக்கிறது.