சிங்கப்பூர் – தூய்மைக்கும், சுகாதாரத்தைப் பேணுவதிலும் உலக அளவில் முதல் தர நாடாகத் திகழும் சிங்கப்பூரையே கொவிட்-19 ஆட்டம் காணச் செய்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பிறப்பிக்காமல், வணிகங்கள், திரையரங்குகள், பேரங்காடிகள், உணவகங்கள் என அனைத்தும் வழக்கம்போல் இயங்க அனுமதித்த சிங்கப்பூர் அரசாங்கம் பின்னர் சுதாரித்துக் கொண்டு மே 7 வரை ஒரு மாத காலத்திற்கு நடமாட்டக் கட்டுப்பாட்டை விதித்தது.
மலேசிய மக்கள் தொகையில் சுமார் பத்து விழுக்காட்டை மட்டுமே கொண்ட சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமையுடன் (ஏப்ரல் 18) மொத்தம் 5,992 கொவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது மலேசியாவில் இதுவரையில் ஏற்பட்ட பாதிப்புகளைவிட அதிகமாகும். மலேசியாவில் நேற்று சனிக்கிழமை வரையில் 5,305 பாதிப்புகளே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
நேற்று சனிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 942 பாதிப்புகள் சிங்கையில் பதிவு செய்யப்பட்டன. எனினும் இந்த பாதிப்புகள் ஓரிரு வெளிநாட்டுத் தொழிலாளர் குடியிருப்புகளில் தொற்று பரவியதால் ஏற்பட்ட அதிகரிப்பு என சிங்கை சுகாதார அமைச்சு தற்காத்தது.
சிங்கப்பூரியர்கள் மற்றும் நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்டவர்களில் 14 பேர்களுக்கு மட்டுமே நேற்றைய 942 எண்ணிக்கையில் பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டன என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குடியிருப்புகளின் மூலம் கொவிட்-19 பாதிப்புகள் அதிகரிக்கும் என சிங்கை பிரதமர் லீ சியன் லூங் எச்சரித்திருக்கிறார்.