புத்ரா ஜெயா – நாளை ஏப்ரல் 24 முதல் இஸ்லாமிய சமூகத்தினர் நோன்பு மாதத்தைத் தொடங்கவிருக்கும் வேளையில், கொவிட்-19 தொடர்பில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும், இதனைத் தொடர்ந்து நடமாட்டக் கட்டுப்பாடு நடைமுறைகள் மே 12 வரையில் தொடரும் என்றும் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்தார்.
இன்று வியாழக்கிழமை இரவு தொலைக்காட்சி வழி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மொகிதின் கொவிட்-19 பாதிப்புகள் கணிசமான அளவில் குறைந்து வருவதால், கட்டம் கட்டமாக கட்டுப்பாட்டு விதிமுறைகளில் தளர்வுகள் செய்யப்படும் என்றும் கூறினார்.
இன்றைய சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி கொவிட்-19 பாதிப்புகளில் இருந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,542 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்புகளில் 63.2 விழுக்காடாகும்.
தங்கள் இல்லங்களுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் பல்கலைக் கழக மாணவர்கள் இல்லங்களுக்குத் திரும்புவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் இவர்களின் எண்ணிக்கை 100,000 மேல் இருப்பதால் முறையானத் திட்டமிடல் அவசியமாகிறது என்றும் மொகிதின் கூறினார்.
இந்தப் பல்கலைக் கழக மாணவர்கள் தங்களின் இல்லங்களுக்குத் திரும்பும்போது நோய்த் தொற்று ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதிருக்கிறது என்றும் மொகிதின் கூறியிருக்கிறார்.