Home கலை உலகம் “ரங்குலு” – தெலுங்கு உள்ளூர் தொலைக்காட்சி திரைப்பட அனுபவங்கள் – விவரிக்கிறார் சோமா காந்தன் (1)

“ரங்குலு” – தெலுங்கு உள்ளூர் தொலைக்காட்சி திரைப்பட அனுபவங்கள் – விவரிக்கிறார் சோமா காந்தன் (1)

956
0
SHARE
Ad
“ரங்குலு” பட இயக்குநர் சோமா காந்தன்

கோலாலம்பூர் – அண்மையில் உகாதி தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் சிறப்புத் திரைப்படமாக ஒளியேறியது முதன்மறையாக உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட தெலுங்கு தொலைக்காட்சிப் படமான “ரங்குலு”. கதாநாயகனாக பிரகாஷ் ராவ், கதாநாயகியாக வாணிஸ்ரீ ராவ் ஆகியோருடன் ரவின் ராவ், சினிபையன் பிளேக் யாப் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

இரசிகர்களின் – குறிப்பாக தெலுங்கு சமுதாய மக்களின் – வரவேற்பையும் ஆதரவையும் பெற்ற இந்தப் படத்தை தற்போது ஆஸ்ட்ரோ ஒன் டிமாண்ட் வாயிலாக ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்து கண்டு மகிழலாம்.

முதல் உள்ளூர் தெலுங்கு தொலைக்காட்சி திரைப்படமான “ரங்குலு”-வை இயக்கிய சோமகாந்தன் தனது அனுபவங்களையும், ரங்குலு பட இயக்கத்தில் ஏற்பட்ட சவால்களையும் செல்லியல் வாசகர்களுக்காக இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

#TamilSchoolmychoice

செல்லியல் அவருடன் நடத்திய பேட்டியில் “ரங்குலு” குறித்த சில கேள்விகளுக்கு பதிலளித்ததின் மூலம் அந்தப் படத்தின் இயக்கம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் சோமகாந்தன்.

கேள்வி : தெலுங்கு தொலைக் காட்சிப் படமொன்றை இயக்கியது இதுதான் உங்களின் முதல் அனுபவமா?

பதில்: ஆம்! இதுதான் என் முதல் தெலுங்கு தொலைக்காட்சி பட இயக்க அனுபவம் என்றாலும் ஏற்கனவே நான் “புஷ்பமுலு நிடுரிஞ்சி” என்ற தெலுங்கு இசை காணொளி ஒன்றை 5 ஆண்டுகளுக்கு முன்பே தயாரித்து வெளியிட்டிருந்தேன்.

“புஷ்பமுலு நிடுரிஞ்சி” காணொளி உள்ளூரில் தயாரிக்கப்பட்ட முதல் தெலுங்கு இசை காணொளியாகும். இதன்மூலம் ஆஸ்ட்ரோவுடன் ஏற்பட்ட தொடர்பால் முதல் தெலுங்கு உள்ளூர் படத்தை உருவாக்க என்னை அவர்கள் அணுகினர். “ரங்குலு”வும் உருவாக்கம் கண்டது.

கேள்வி : உங்களுக்கு தெலுங்கு மொழியில் ஏற்கனவே பரிச்சயம் உண்டா? எந்த அடிப்படையில் தெலுங்குப் படத்தை உருவாக்க முன்வந்தீர்கள்?

பதில் : எனது தாய்மொழி தெலுங்கு அல்ல! ரங்குலு உருவாக்கத்திற்கு முன்னர் எனக்கு தெலுங்கில் ஒரு வார்த்தையும் தெரியாது. சிறுவயது முதல் எனக்கு சினிமாத் திரைப்படங்கள் மீதான ஆர்வமும், விருப்பமும் நிறைய இருந்தது. குறிப்பாக தமிழ்ப் படங்களின் மீது. காலப் போக்கில் சினிமா என்பது மொழிகளைக் கடந்த ஊடகம் என்பதை உணர்ந்து கொண்ட நான் இத்தாலி, பிரெஞ்சு, அர்ஜென்டினா, ஸ்பானிஷ், மெக்சிகோ, கொரியா, தெலுங்கு, மலையாளம், இந்திய என அனைத்து மொழிகளிலும் வெளிவந்த சிறந்த படங்களை இரசிக்கத் தொடங்கினேன்.

அந்த வகையில் மொழிகளின் எல்லைகளைக் கடந்து திரைப்படங்களைக் காதலிப்பவனாக ரங்குலுவையும் உருவாக்கத் தொடங்கினேன். எனக்கு புதிய சவால்களை எதிர்கொள்ளப் பிடிக்கும். அந்த வகையில் எனக்கு ஏற்ற பொருத்தமான சவாலாக அமைந்தது.

ரங்குலு திரைப்படத்துடன் எனது ஏழு மாதப் பயணத்திற்குப் பின்னர், படத்தை உருவாக்க வேலைகள், படப்பிடிப்புகள், படப்பிடிப்பு முடிந்தவுடன் நடந்த தயாரிப்புக்கு பிந்திய பணிகள் என அனைத்தையும் முடித்தபோது “ரங்குலு”வில் இடம் பெற்ற அத்தனை வசனங்களையும் என்னால் பேசவும், புரிந்து கொள்ளவும் முடிந்தது.

தெலுங்கு மொழியைப் பற்றிய எல்லா அம்சங்களையும்கூட நான் தெரிந்து கொண்டேன். ஆந்திரா மாநிலத்தில் அந்த மொழி எவ்வாறு உச்சரிக்கப்படும், விசாகப்பட்டினத்தில் எவ்வாறு உச்சரிக்கப்படும் என்பது போன்ற நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டு அந்த மொழிக்கு உரிய மரியாதையைத் தரவும் நான் பழகிக் கொண்டேன்.

தெலுங்கு மொழியில் சில உச்சரிப்புகளில் ஏற்படும் சிறிய வித்தியாசங்கள் கூட பெரிய மாற்றத்தைத் தரும் என்பதையும் உணர்ந்து கொண்டேன். இப்படியாக தெலுங்கு மொழியின் பல்வேறு சிறப்புகளையும், அம்சங்களையும் நான் கற்றுக் கொள்ள வாய்ப்பாக “ரங்குலு” அமைந்தது.

ரங்குலு – படத்தின் கதாநாயகன் பிரகாஷ் ராவ்

கேள்வி : ரங்குலு உருவாக்கத்தில் உங்களுக்கு ஏற்பட்ட சவால்கள் என்ன?

பதில் : எனக்குத் தெலுங்கு மொழி தெரியாது என்பதால் கதை உருவாக்கம் முதற்கொண்டு, படத்திற்கான கடைசி படத் தொகுப்பு வரை எல்லாமே எனக்கு சவால்களாகவே அமைந்தன. தெலுங்கு மொழியில் பரிச்சயமும் புலமையும் கொண்ட பலரின் உதவி எனக்குத் தேவைப்பட்டது.

படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் யாவும் எனக்கும் முன்பே பேசிக் காட்டப்பட்டது. இதன் மூலம் எனக்கும் படத்தின் வசனங்கள் நன்கு பழக்கமாகியிருந்தன.

படப்பிடிப்பு தொடங்கும் நேரம் வரும்போது எல்லா காட்சிகளுக்குமான முக்கிய வார்த்தைகள் அனைத்தும் எனக்கு நன்கு புரிந்திருந்தன. எனவே, படப்பிடிப்பு நடைபெறும்போது அந்தக் கதாபாத்திரங்கள் அந்த வசனங்களுக்குரிய உணர்ச்சிகளோடு பேசுகிறார்களா என்பதை என்னால் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.

படப்பிடிப்பு சமயத்தில் எதிர்பாராதவிதமாக கொவிட்-19 பிரச்சனைகளும் எதிர்கொள்ள, படப்பிடிப்புக்கான அனைத்து இலாகாக்களிலும் மற்றவர்களின் துணையின்றி நான் பணியாற்ற வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

திரைக்கதை மற்றும் உரையாடல்கள் உருவாக்கத்தின்போது எனது மூலக்கதையை சிதைக்காமல் செதுக்க வேண்டிய சவாலும் எனக்கிருந்தது. கதையின் மூலக் கூறுகள் அனைத்தும் இடம் பெற வேண்டியதையும் நான் உறுதி செய்ய வேண்டியதிருந்தது. மக்கள் கதையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற சவாலும் இருந்தது. இவையெல்லாம் சேர்ந்து எனது கடுமையான உழைப்பை ரங்குலு படம் என்னிடமிருந்து எடுத்துக் கொண்டது. நானும், எனக்கு உதவியாளராகவும், தயாரிப்புப் பணிகளிலும் ஈடுபட்ட சூரியாத்தி சகாதேவனும் ரங்குலு தொடங்கியது முதல் இறுதி வடிவம் பெறும் வரை கடுமையாக உழைத்திருக்கிறோம்.

கேள்வி : படத்திற்கான வசனங்கள் தமிழ் – தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இடம் பெற்றிருந்தன. இது ஏற்கனவே திட்டமிடப்பட்டதா அல்லது படத்தின் கதையின் அமைப்பிற்கேற்ப அவ்வாறு செய்யப்பட்டதா?

பதில் : ஆந்திரா, தெலுங்கானா மக்கள் அனைவருக்கும் தமிழில் பேசவோ அம்மொழியைப் புரிந்து கொள்ளவோ தெரியாது. ஆனால், மலேசியாவிலோ நிலைமை வேறு. இங்குள்ள தெலுங்கு வம்சாவளியினர் அனைவரும் தமிழை முதன் மொழியாகப் பயன்படுத்துகின்றனர்.

குடும்பத்தினர் நண்பர்கள் என சிலரிடம் மட்டுமே தாய்மொழி தெலுங்கில் அவர்கள் உரையாடுகின்றனர். எனவே, ரங்குலு மலேசிய தெலுங்கு வம்சாவளியினரின் உண்மையான வாழ்க்கைச் சூழலை எடுத்துக் காட்ட வேண்டும் என்பதிலும் மாறாக இந்தியாவின் தெலுங்கு வம்சாவளியினரைப் பிரதிபலிக்கக் கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தேன்.

நமது திரைப்படங்கள் நமது வாழ்க்கைச் சூழலையும் கதைகளையும் விவரிப்பதாக இருக்க வேண்டும் என்பதை நம்புகிறவன் நான். நமது இன்றையை காலச் சூழலை எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துக் காட்டும் ஆவணங்களாக திரைப்படங்கள் அமைய வேண்டும்.

தெலுங்கு வம்சாவளியினர் அல்லாதவர்களை ரங்குலுவின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கும்படி ஆஸ்ட்ரோ அலைவரிசைகளுக்கான நிர்வாகி மகேஷூம் ஆலோசனை தெரிவித்திருந்தார்.

எனவே, 85 விழுக்காட்டு தெலுங்கு மொழியையும், 15 விழுக்காடு தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மற்ற மொழிகளைக் கொண்டும் திரைக்கதையை நாங்கள் அமைத்தோம்.

எனவே, ரங்குலு மலேசிய தெலுங்கு சமுதாயத்தைப் பெருமையுடன் எடுத்துக் காட்டும் திரைப்பட முயற்சியாக உருவாகியிருக்கிறது.

தெலுங்கு தெரியாத மற்றவர்களும் இந்தப் படத்தைப் பார்த்து மகிழ்வார்கள். மலேசியாவுக்கே உரிய இந்த தனித்துவமான மொழி சூழலை – கலவையை – நான் அன்றாடம் காணும் கேட்கும் உரையாடல் சூழலை – படத்திலும் கொண்டு வந்துள்ளோம்.

அடுத்து : ரங்குலு இயக்குநரின் அனுபவங்கள் (பாகம் : 2) தொடர்கிறது…

  • தெலுங்கு மொழி உரையாடல்கள் எப்படி எழுதப்பட்டன?
  • பட உருவாக்கத்தின்போது போது நினைவில் நிற்கும் அனுபவங்கள்?