Home கலை உலகம் “ரங்குலு” – தெலுங்கு உள்ளூர் தொலைக்காட்சி திரைப்பட அனுபவங்களை விவரிக்கிறார் இயக்குநர் சோமா காந்தன் (2)

“ரங்குலு” – தெலுங்கு உள்ளூர் தொலைக்காட்சி திரைப்பட அனுபவங்களை விவரிக்கிறார் இயக்குநர் சோமா காந்தன் (2)

668
0
SHARE
Ad
“ரங்குலு” பட இயக்குநர் சோமா காந்தன்

கோலாலம்பூர் – அண்மையில் உகாதி தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் சிறப்புத் திரைப்படமாக ஒளியேறிய முதல் உள்ளூர் தெலுங்கு தொலைக்காட்சிப் படமான “ரங்குலு” படத்தை இயக்கிய சோமா காந்தன் தன்னுடைய அனுபவங்களைத் தொடர்ந்து விவரிக்கிறார்.

இரசிகர்களின் – குறிப்பாக தெலுங்கு சமுதாய மக்களின் – வரவேற்பையும் ஆதரவையும் பெற்ற இந்தப் படத்தை தற்போது ஆஸ்ட்ரோ ஒன் டிமாண்ட் வாயிலாக ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்து கண்டு மகிழலாம்.

முதல் உள்ளூர் தெலுங்கு தொலைக்காட்சி திரைப்படமான “ரங்குலு”-வை இயக்கிய சோமகாந்தன் தனது அனுபவங்களையும், ரங்குலு பட இயக்கத்தில் ஏற்பட்ட சவால்களையும் செல்லியல் வாசகர்களுக்காக இந்தப் பேட்டியின் மூலம் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறார்.

#TamilSchoolmychoice

இந்தப் பேட்டியின் முதல் பாகம் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) செல்லியலில் இடம் பெற்றது.

கேள்வி : ரங்குலு படத்திற்கான தெலுங்கு மொழி வசனங்கள் தெலுங்கிலேயே எழுதப்பட்டனவா அல்லது ஆங்கில எழுத்துருவில் (Romanised) எழுதப்பட்டனவா?

பதில் : தெலுங்கு மொழி வார்த்தைகள் படத்தில் பணிபுரிந்த பலருக்குத் தெரியாததால் ஆங்கில எழுத்துரு கொண்டே எழுதினோம். முதலில் பிரகாஷ் மற்றும் நவீன் சாம்ராட் இருவரும் 2 மையக் கதாபாத்திரங்களை மட்டும் கொண்டு ஓர் எளிமையான காதல் கதையை உருவாக்கியிருந்தனர்.

அதைக் கொண்டு 40 காட்சிகளுடன் 90 நிமிடப் படமாக திரைக்கதை அமைத்து எங்களின் தெலுங்கு மொழிபெயர்ப்பாளரான திவியா நரசய்யாவிடம் கொடுத்தோம். திவியா எங்களிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். அவர்தான் எல்லா உரையாடல்களையும் தெலுங்கு மொழியில் உருவாக்கினார்.

அதன் பின்னர் படத்தின் முழு திரைக்கதை வசனங்களையும் நாங்கள் பரிசீலித்தோம். இந்தப் பணியில் மொழி பெயர்ப்பாளர்களும் ஆலோசகர்களும் எங்களுக்கு உதவி புரிந்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் லதா பத்மினி (தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினர்). மற்றவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த தேஜா பிரசாத் மற்றும் விசாகப்பட்டனத்தைச் சேர்ந்த மணி தீபக்.

அவர்கள் அனைவரும் சிறந்த திறன்களைக் கொண்டிருந்தனர். தெலுங்கு மொழியில் நல்ல புலமையும் கொண்டிருந்தனர். அவர்கள் இணைந்து படத்தின் திரைக்கதை வசனங்களை மேலும் செம்மைப்படுத்தினர். தெலுங்கு வசனங்கள் ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டு எழுதப்பட்டன. ஆங்கில மொழிபெயர்ப்பையும் நாங்கள் கொண்டிருந்தோம்.எங்கள் குழுவினரில் சிலருக்கு தெலுங்கு மொழியில் படிக்கவும் எழுதவும் ஆற்றல் இருந்தது. அவர்களில் பத்து வயது சிறுவனும் ஒருவன்.

கேள்வி : படம் முடிவடைந்து தொலைக்காட்சியிலும் ஒளியேறிய பின்னர் பகிர்ந்து கொள்ள விரும்பும் அனுபவங்கள் ஏதாவது?

பதில் : எல்லாமே நினைவில் நிற்பவைதான்! கோலாலம்பூர் கேடிஎம் இரயில் நிலையத்தில் நாங்கள் படம் பிடித்தது நல்ல அனுபவம். தைப்பூசத்திற்கு முதல் நாள் இரவு ஏராளமான பயணிகள் இருந்த சூழலில் சொற்ப படப்பிடிப்புக் குழுவினரோடு நாங்கள் படப்பிடிப்பை நடத்தினோம்.

அதே போல படத்தில் நடிப்பதற்கான சிறந்த நடிக – நடிகையரைத் தேர்ந்தெடுக்கவும் பல நேர்முகத் தேர்வுகள் நடத்தினோம். மலாக்கா, ஜோகூர்பாரு, ஈப்போ, சிங்கப்பூர் எனப் பல இடங்களில் இருந்து மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற தூரநாடுகளில் இருந்தும் ஆர்வத்துடன் பலர் கலந்து கொண்டனர்.

இவர்களைக் கொண்டு ஒரு சிறந்த நடிகர் – நடிகையர்களைக் கொண்ட குழுவை ரங்குலுவுக்காகத் தேர்ந்தெடுத்தோம். இவர்களில் சுமார் 90 விழுக்காட்டினர் புதுமுகங்கள். எனது முதல் தொலைக்காட்சிப் படத்திலேயே இதனை என்னால் சாதிக்க முடிந்தது குறித்து பெருமைப்படுகிறேன்.

கேள்வி : எதிர்காலத்தில் இதுபோன்று மேலும் தெலுங்குப் பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா?

பதில் : தமிழ் தவிர்த்து மற்ற மொழிப் படங்களை உருவாக்க நான் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் இன்னொரு தெலுங்குப் படத்தை உருவாக்குவேனா என்பது இப்போதைக்கு இல்லை. ரங்குலு மிகவும் சவால் மிக்க பயனான முயற்சி. மற்றவகைப் புதிய சவால்களை எதிர்நோக்கவே நான் விரும்புகிறேன்.

நல்ல கதைகளையும் சிறந்த காட்சியமைப்புகளையும் கொண்ட ரங்குலு போன்ற படங்களை மற்ற மொழிகளில் உருவாக்கவே நான் விரும்புகிறேன்.

நிறைவாக ரங்குலு குறித்து சில விஷயங்களைக் கூற விரும்புகிறேன்.

ஒரு புதிய, இளைய தலைமுறையினரைக் கொண்டு உருவாக்கப்பட்டது ரங்குலு. எங்களின் கடுமையான உழைப்பை வழங்கி நேர்மையான முறையில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

ஏற்கனவே ஆஸ்ட்ரோ வானவில்லில் ஆஸ்ட்ரோ ஒன் டிமாண்ட் அலைவரிசையில் எப்போது வேண்டுமானாலும் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் இந்தப் படத்தைப் பதிவிறக்கம் செய்து பார்த்து மகிழலாம். நீங்கள் நிச்சயம் திருப்தியடைவீர்கள். ரங்குலு உங்களுக்கு ஏமாற்றம் தராது.  உங்களின் கருத்துகளையும் தெரிவியுங்கள்.

எங்களின் படக் குழுவினர் இன்னும் பெரியதாக, சிறப்பானதாக சாதிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.

உங்களின் தொடர்ந்த ஆதரவு எங்களுக்குத் தேவை.

தொடர்புடைய முந்தைய பதிவு :

“ரங்குலு” – தெலுங்கு உள்ளூர் தொலைக்காட்சி திரைப்பட அனுபவங்கள் – விவரிக்கிறார் சோமா காந்தன் (1)