புத்ரா ஜெயா: இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) நண்பகல் வரை மலேசியாவில் 31 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,851-ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 75 பேர்கள் கொவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்டு, இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,032 ஆக உயர்ந்திருக்கிறது என்று சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
தற்போது நாடு முழுமையிலும் 1,718 பேர்கள் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 36 பேர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 17 பேர்கள் சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே வேளையில் இன்று ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில், மரண எண்ணிக்கை 100-ஆக உயர்ந்திருக்கிறது.
இதற்கிடையே, கொரொனாவைரஸ் பாதிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியதிலிருந்து மலேசியா தனது கொவிட் -19 நோயாளிகளில் கிட்டத்தட்ட 4,000 அல்லது 67 விழுக்காட்டு பேரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றியுள்ளது.
மார்ச் 18 அன்று அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைவின் வெற்றி இது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
“நாம் இப்போது மீட்பு கட்டத்தில் இருக்கிறோம். நம்மால் நோயை சமன் செய்ய முடிந்தது. மேலும் நிகழ்வுகளின் அதிவேக எழுச்சியைத் தடுத்துள்ளோம் ” என்று அமைச்சின் தினசரி கொவிட் -19 பத்திரிகையாளர் சந்திப்பில் நேற்று திங்கட்கிழமை டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.
அடுத்த வாரத்திற்குள் பரிசோதனை திறனை ஒரு நாளைக்கு 22,000- ஆக உயர்த்த முடியும் என்று அமைச்சகம் நம்புவதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.