புதுடில்லி – தடுப்பூசி மருந்துகளை தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் இந்திய நிறுவனம் செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம். உலக நாடுகள் பலவற்றிலும் பல மருத்துவ ஆராய்ச்சி மையங்களிலும் கொவிட்-19 தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் செரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமைச் செயல் அதிகாரி அடர் பூனாவாலா (படம்) விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தாங்கள் தயாரித்து வரும் கொவிட்-19 எதிரான தடுப்பூசி நல்ல பரிசோதனை முடிவுகளைத் தந்திருப்பதாவும் செப்டம்பர் இறுதிக்குள் அது சந்தைக்கு வரும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அதன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஆயிரம் ரூபாய் மட்டுமே இருக்கும் எனவும் அவர் கோடி காட்டியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இணைந்து செரம் இன்ஸ்டிடியூட் கொவிட்-19 தடுப்பூசியைக் கண்டுபிடிக்கத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.
அந்நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் தடுப்பூசி மருந்து மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அது நல்ல பலன்களைத் தந்திருப்பதாவும் அடர் பூனாவாலா தெரிவித்திருக்கிறார்.