Home வணிகம்/தொழில் நுட்பம் உலகம் எங்கும் எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி! சிங்கையில் மிதக்கும் சேமிப்புக் கிடங்குகளாக எண்ணெய் கப்பல்கள்!

உலகம் எங்கும் எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி! சிங்கையில் மிதக்கும் சேமிப்புக் கிடங்குகளாக எண்ணெய் கப்பல்கள்!

686
0
SHARE
Ad

நியூயார்க்/சிங்கப்பூர் : உலகின் பெரும்பகுதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளால் முடங்கிக் கிடக்கும் நிலையில் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்து விட்டன.

இயற்கையான சூழல்கள் திரும்பியிருக்கின்றன. வான்வெளியில் காற்றின் தூய்மைக் கேடும் வெகுவாகக் குறைந்து ஆரோக்கியமான நிலைமைகள் எங்கும் ஏற்பட்டிருக்கின்றன.

இதன் எதிரொலியாக தேவைகள் குறைந்துள்ளதால் தொடர்ந்து எண்ணெய் விலைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

#TamilSchoolmychoice

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 10.64 டாலர்களாக விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது.

விற்பனை செய்யப்பட முடியாமல் தேங்கிக் கிடக்கும் பெட்ரோலிய எண்ணெயை சேமித்து வைப்பதற்கான கிடங்குகளில் பற்றாக் குறை, தேக்க நிலை ஏற்பட்டுள்ளது எண்ணெய் விலை வீழ்ச்சிக்கான முக்கியக் காரணங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தேங்கிக் கிடக்கும் பெட்ரோலிய எண்ணெய், கப்பல்களிலேயே அப்படியே வைக்கப்பட்டிருக்கின்றன. எண்ணெயை சேமித்து வைக்கும் கிடங்குகளாகவும் எண்ணெய் கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உலக அளவில் எண்ணெய்க்கான தேவை 30 விழுக்காடு குறைந்திருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளில் 85 விழுக்காடு முழு கொள்ளிட அளவை எட்டியிருக்கின்றன.

கடந்த 9 வாரங்களில் எண்ணெய் சந்தையில் 8 வாரங்கள் தொடர் வீழ்ச்சியை எண்ணெய் விலைகள் சந்தித்து வருகின்றன.

எண்ணெய் பரிமாற்றத்திற்கு பிரபலமான சிங்கப்பூர் துறைமுகத்தில் எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமாக 30 முதல் 40 கப்பல்கள் வரிசை பிடித்து நிற்கும் சிங்கை துறைமுகத்தில் தற்போது சுமார் 60 எண்ணெய் கப்பல்கள் காலியாக நங்கூரமிட்டிருக்கின்றன. இவற்றில் சில எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மற்றவையோ, எண்ணெய் விற்பனை உத்தரவுகள் வந்ததும் கடல் பயணம் மேற்கொள்ள காத்திருக்கின்றன.

இதற்கிடையில் சிங்கப்பூரின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் சுத்திகரிப்பு விழுக்காடும் மொத்த ஆற்றலில் 60 விழுக்காடு குறைந்திருக்கிறது. இது மேலும் 50 விழுக்காடு நிலைக்கு குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரபூர்வமற்ற இரகசியத் தகவல்களின்படி மலேசியா, சிங்கப்பூர் கடல் பகுதிகளில் ஏப்ரல் 23 வரை கப்பல்களிலேயே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எண்ணெயின் அளவு 6.64 மில்லியன் பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.