கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியக் காரணங்களுக்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு 30 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திருத்துவதற்காக உயர் நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்துள்ளார்.
குற்றத்தை பி. லிசா கிறிஸ்டினா ஒப்புக் கொண்ட நிலையில், ஏப்ரல் 21-ஆம் தேதியன்று நீதிபதி அவரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அவர் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது (பாதிக்கப்பட்ட உள்ளூர் பகுதி நடவடிக்கைகள்) விதிமுறைகள் அதிகபட்சமாக 1,000 ரிங்கிட் அபராதம், மற்றும் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை விதிப்பது கட்டாயமானதல்ல என்று வழக்கறிஞர் ஏ. ஸ்ரீமுருகன் தெரிவித்துள்ளார்.
லிசாவின் வழக்கை சிலாங்கூர் சட்ட உதவி மையம் விசாரித்து வருகிறது. வழக்கறிஞர் ராஜ்பால் சிங் லிசாவின் வழக்கை வாதிட உள்ளார்.
அதிகபட்ச 1,000 ரிங்கிட் அபராதம் மட்டுமே வழங்கப்பட்ட மற்ற இருவருடன் சேர்ந்து, தமக்கு மட்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக லிசா கூறினார்.
ஏப்ரல் 12-ஆம் தேதி மாலை 5 மணியளவில் சுபாங் ஜெயாவில் உள்ள தாமான் சுபாங் மாஸில் அவர் இந்த குற்றத்தைப் புரிந்தார்.