Home One Line P1 “மன உறுதியுடன் மீண்டு வருவோம்” – சரவணன் தொழிலாளர் தின செய்தி

“மன உறுதியுடன் மீண்டு வருவோம்” – சரவணன் தொழிலாளர் தின செய்தி

662
0
SHARE
Ad

புத்ராஜெயா – கொவிட்- 19 கொடிய தொற்று வைரஸ் பேயாட்டத்திற்குப் பின்னர் ஏற்படவுள்ள பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்வதற்கு மலேசியர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தனது தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தினார்.

“உழைப்பு, சேமிப்பு, காப்புறுதி ஆகியவற்றில் மலேசியர்கள் முழுக் கவனம் செலுத்தினால் மட்டுமே படுமோசமான வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இக்காலகட்டத்தில் வேலை இழந்தவர்களுக்குத் தொழிற் பயிற்சி, வேலை வாய்ப்புகள் போன்றவற்றை மனிதவள அமைச்சு வழங்கி வரும்” என்று சரவணன் தனது செய்தியில் மேலும் தெரிவித்தார்.

“அதே சமயத்தில் சிறுதொழிலில் ஈடுபடுவதற்கு மலேசியர்கள் தயாராக இருக்க வேண்டும். சிறுதொழில் துறைகளில் வாய்ப்புகள் நிறைந்து கிடக்கின்றன. அரசாங்கத்தின் உதவியும் அளவில்லாமல் கிடைக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளன. இதனை நன்கு பயன்படுத்தி இழப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு மலேசியர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“2020 தொழிலாளர் தினம் மிகவும் அர்த்தமுள்ளது. சமூகப் பொருளாதார வீழ்ச்சிகள் மற்றும் பாதிப்புகள் மிகக் கடுமையாக இருக்கின்ற காலகட்டத்தில் நம்முடைய 1 கோடியே 58 லட்சம் தொழிலாளர்களின் அவலத்தையும் போராட்டத்தையும் சமாளித்துக் கரை சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பையும் சுமையையும் அரசங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. மலேசியாவின் பொருளாதாரம் மற்றும் அதன் வளர்ச்சியின் முதுகெலும்பாகத் தொழிலாளர்கள் விளங்குகின்றனர். தேச நிர்மாணிப்பில் தோட்டத்துறை தொடங்கி பொருளாதாரம், சேவைகள், சுயதொழில் ஆகிய துறைகளைச் சார்ந்த அனைத்துத் தரப்பினரும் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

“கொவிட்- 19 தொற்றுக் கிருமி பரவுதலில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் மலேசியத் தொழிலாளர்கள் முன்னணி வகிக்கின்றனர்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இந்த விபரீதங்களுக்கு ஆணிவேராக அமைந்திருந்தாலும் மக்கள் நலனை முன்னிட்டு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் தடுப்பு நடவடிக்கைகள் அவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்குப் பெரும் துணையாக இருந்திருக்கின்றது. இக்காலகட்டத்தில் இக்கொடிய தொற்றுக்கிருமி பாதிப்பில் இருந்து மலேசியர்களைக் காத்திடுவதற்கு இரவு – பகல் பாராது தங்களின் உயிரைத் துச்சமாக மதித்து கடமையாற்றி வரும் முன்னிலைப் பணியாளர்களுக்கு அரசாங்கம், குறிப்பாக மனிதவள அமைச்சு நன்றி சொல்லிக் கொள்வதை ஓர் உன்னதக் கடமையாகக் கருதுகிறது” என்றும் சரவணன் மேலும் தெரிவித்தார்.

இவ்வேளையில் நாட்டு நிலவரங்களை மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் உண்மையாகவும் மக்களுக்குத் தெரிவித்து வரும் ஊடகப் பணியாளர்களுக்கும் தம்முடைய வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

“நடமாட்டம் நிறுத்து… கொரோனாவைத் துரத்து… வாசல் கடக்காதே… வாழ்வைத் தொலைக்காதே…!”