Home அரசியல் சுப்ராவை எதிர்த்து போட்டியிடும் சுவா ஜுய் மெங்கிற்கு ஆதரவு பெருகுகிறது

சுப்ராவை எதிர்த்து போட்டியிடும் சுவா ஜுய் மெங்கிற்கு ஆதரவு பெருகுகிறது

674
0
SHARE
Ad

suwa-jui-mengசெகாமாட், எப்ரல் 11- செகாமாட்  நாடாளுமன்ற தொகுதியில் மனிதவள அமைச்சர் டாக்டர் சுப்ராவை எதிர்த்து போட்டியிடும் சுவா ஜுய் மெங்கிற்கு மக்கள் கூட்டணி உறுப்பு கட்சிகளிடமிருந்து ஆதரவு பெருகியுள்ளது.

எதிரும் புதிருமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட  ஜசெக செகாமட் தொகுதி தலைவர் பாங் ஹோக் லியோங் – சுவா ஜூய் மெங் இருவரும் நேற்று ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, பாஸ், ஜசெக, பிகேஆர் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்று இணைந்து தேசிய முன்னணி வேட்பாளரான சுப்ரமணியத்தை எதிர்க்க தயாராக உள்ளனர்.

#TamilSchoolmychoice

கடந்த பொதுத் தேர்தலில் சுப்ரமணியத்தை எதிர்த்துப் போட்டியிட்ட பாங் இந்த முறை சுவாவிற்கு செகாமாட் தொகுதி ஒதுக்கப்பட்டது குறித்து ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பதோடு, சுவாவிற்கு எதிராக சுயேச்சை வேட்பாளராக செகாமாட்டில் போட்டியிடுவார் என்றும் ஆரூடங்கள் உலவி வந்தன.

ஆனால் இப்போது இருவரும் இணைந்துள்ளதால், இந்த தொகுதியை வெற்றி கொள்வதற்கான வாய்ப்பு சுவாவிற்கு பெருகியுள்ளது.

subraஇது குறித்து பேசிய செகாமாட் ஜசெக தலைவர் பாங், எங்களின் பொது எதிரி தேசிய முன்னணி என்றும் பொதுத் தேர்தலுக்காக நாங்கள் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றும் கூறினார்.

இதற்கிடையில் பாஸ் கட்சியும் மலாய் வாக்காளர்களின் ஆதரவை பெற கடுமையாக பாடுபடும் என்று அந்த தொகுதி பாஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

செகாமாட் தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு பாஸ் ஆன்மீக தலைவர் நிக் அஸீஸ் எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அங்கு வருகை தருவார் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், செகாமாட் ஜசெக தலைவர் பாங் சிகாமாட் தொகுதியில் உள்ள  ஜெமெந்தா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த முறை செகாமாட் தொகுதியிலும், ஜெமெந்தா தொகுதியிலும் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை தேர்தலுக்கு செகாமாட் தொகுதியில் 47, 115 வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் சீனர்கள் 46 சதவீதமும், மலாய்காரர்கள் 44 சதவீதமும் மற்றும் இந்தியர்கள் 10 சதவீதமும் இருக்கின்றனர்.