Home One Line P1 தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மலாயா கணபதி

தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மலாயா கணபதி

1604
0
SHARE
Ad
மலாயா எஸ்.ஏ.கணபதி

(மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு பெயர் “மலாயா எஸ்.ஏ.கணபதி”. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அவர் மீது சர்ச்சையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் தூக்கிலிடப்பட்டார். அது குறித்த சில சர்ச்சைகள் இருந்தாலும், மலேசிய இந்தியர்களுக்காகவும், தோட்டத் தொழிலாளர்களுக்காகவும் அவர் போராடியவர், தியாகம் செய்தவர் என்பதில் அனைவருக்கும் ஒருமுகக் கருத்துண்டு. இன்று மே 4 அவர் தூக்கிலிடப்பட்ட நினைவு நாள். அதனை முன்னிட்டு நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை வெளியிடப்படுகிறது)

மலாயா கணபதி நினைத்திருந்தால் வளமான வாழ்வை நலமாக வாழ்ந்திருக்க முடியும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்,  சிங்கப்பூரில் உருவாக்கிய ஆசாத் இந்திய அரசாங்கத்தில் ஓர் அதிகாரியாகப் பொறுப்பேற்ற நிலையில் வாழ்க்கையை நல்லபடியாகத் தொடர்ந்திருக்கலாம்.

ஆனால், இன்று நாம் அவரை நினைவுகூரவோ எண்ணிப் பார்க்கவோ அவசியம் எழுந்திருக்காது!.

#TamilSchoolmychoice

போராட்ட குணமும் தொழிலாளர் நல சிந்தனையும் உள்ளத்தில் நிறைந்திருந்த காரணத்தால், அந்தப் பதவியில் கணபதியால் நீடிக்க முடியாமல் போனது.

நல்ல வாழ்வை உதறித் தள்ளி விட்டு, கிள்ளான் மண்டலத்தில் இந்தியப் பாட்டாளிகள் உழைப்பால் சுரண்டப்படுவதையும் ஊதியத்தால் புறக்கணிப்படுவதையும் அறிந்து கொதித்தெழுந்ததுடன் நேரடியாகக் களத்திலும் இறங்கினார் கணபதி.

ஆங்கில தோட்ட முதலாளிகளுக்கும் நயவஞ்சகக் கங்காணிகளுக்கும் எதிராக நேரடியாகக் குரல் கொடுத்த கணபதிக்கு, வாழ்வில் கிடைத்த பரிசு தூக்கு மேடைதான் என்றானது.

இளமை வீற்றிருக்க, இனிமை பொங்கிய வண்ணம் வசந்த வாசல் கூவி கூவி அழைத்தும் அதை ஒரு பொருட்டெனக் கருதாமல் தொழிலாளத் தோழர்களுக்காக தன் வாழ்வையும் உயிரையும் ஈகம் செய்தவர் மலாயா கணபதி.

சுதந்திரத்திற்கு முந்தைய மலாயாவில் உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் வழங்கப்படாமல் இந்திய தோட்டப் பாட்டாளிகள் சக்கையாகப் பிழியப் படுவதற்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக இளமைப் பருவத்தைக்கூட கடக்காத நிலையில் 37 வயதிலேயே ஆங்கில ஆட்சியாளர்களால் தூக்கு மேடை ஏற்றப்பட்டவர் எஸ்.ஏ.கணபதி.

தஞ்சைத் தரணியில் உதித்து சிங்கையில் கல்வி பயின்று இம்மலையக தமிழ்த் தொழிலாளர்களுக்காக உரிமைக் குரல் எழுப்பியவர் அவர். நாடு விடுதலை அடைவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன், 1949-ஆம் ஆண்டு மே மாதம் 4-ஆம் நாளில் தூக்குக் கயிற்றின் மூலம் மரண தண்டனை அளித்து புடு சிறையில் கறுப்பு அத்தியாயம் படைக்கப்பட்டது.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கில ஆதிக்க ஆட்சியாளர்கள் நான்கு ஆண்டுகளுக்கு மேல் பாடுபட்டு உருவாக்கிய நெடுஞ்சிறை, புடு சிறைச்சாலை.

ஒரேயொரு சின்ன சன்னல் மட்டும் அமைக்கப்பட்டு, இருள் சூழ்ந்த சிறுசிறு கொட்டடிகளாக அமைக்கப்பட்டிருந்த புடு சிறை, உண்மையில் ஒரு கொடுஞ்சிறை ஆகும். 1895 முதல் 1996 வரையென 101 ஆண்டுகளுக்கு இயங்கிய அந்தச் சிறை, சுதந்திரத்திற்குப் பின்னரும் மலேசிய அரசாங்கத்தால் காவல் துறையினரின் கீழ் தொடர்ந்து நிருவகிக்கப்பட்டு வந்தது.

1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்ட நிலையில், மலாயாவில் இளம் புரட்சித் தலைவராகவும் பாட்டாளிகளின் தோழனாகவும் விளங்கிய மலாயா கணபதி, பண்டித நேருவே வியக்கும் அளவிற்கு புகழ் பெற்றிருந்தார்.

உழைப்பாளர்களைச் சுரண்டுவதிலும் அவர்களின் உழைப்பைத் திருடுவதிலும் கரைகண்ட ஆங்கிலேய தோட்ட முதலாளிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் தொழிற்சங்க நடவடிக்கை என்றாலே ஆகாத நிலையில், தொழிற்சங்கத் தலைவரை மட்டும் எங்கே பிடிக்கப்போகிறது?

35 வயதிலேயே மலாயாத் தோட்டத் தொழிற்சங்க தேசியத் தலைவராக உயர்ந்த பாட்டாளித் தோழர் கணபதி, உடனிருந்து இழைக்கப்பட்ட துரோகத்திற்கு ஆளானவர்; சிலாங்கூர், பத்து ஆராங் என்னும் சிற்றூர் அருகே கைது செய்யப்பட்ட கணபதி, காட்டிக் கொடுக்கப்பட்டவர் என்றும் சொல்லப்படுவதுண்டு

அவர் கைது செய்யப்பட்டதற்கு ஆங்கில ஆட்சியாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு, கணபதி துப்பாக்கியும் தோட்டாக்களும் வைத்திருந்தார் என்பதுதான். கைது செய்தபின் அவர்மீது முறையாக விசாரணை நடத்துவதற்குப் பதிலாக, அவருக்கு அவசர அவசர்மாக தண்டனை கொடுப்பதிலேயே ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறியாக இருப்பதை அறிந்து, அப்போது திமுக தலைவரான அறிஞர் அண்ணா புதுடில்லிக்குக் கடிதம் எழுதி, கணபதியைக் காப்பாற்றும்படி நேருவை கேட்டுக் கொண்டார்.

உண்மையில், அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரைவிட கண்பதிக்கு நேருவுடன் நெருக்கமும் நட்பும் இருந்தது. புதுடில்லியில், ஜவர்ஹலால் நேருவின் தலைமையில்  நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான நட்புறவு மாநாட்டில் மலாயாப் பேராளர்களில் ஒருவராக எஸ். ஏ. கணபதியும் கலந்து கொண்டபோது நேருவுக்கு நன்கு அறிமுகமானார் அவர்.

அதுமட்டுமல்ல! நேதாஜி சுபாஷ் சந்திரபோசிற்கும் நெருக்கமானவராக இருந்தார் கணபதி.

அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக விளங்கிய கணபதி, மலாயாவின் உழைக்கும் மக்களின் உரிமைக்காக மட்டும் போராடவில்லை; மலாயாவின் அரசியல் விடுதலைக்காகவும் பெரும் போராட்டங்களை முன்னின்று நடத்தியதால் வஞ்சகமாக குறிவைக்கப்பட்டு பொறியில் சிக்க வைக்கப்பட்டார் என்று கூறுவோரும் உண்டு.

கணபதியை தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்க பிரிட்டின் வரை காய் நகர்த்தினார் நேரு. பிரிட்டனுக்கான அந்நாளைய இந்தியத் தூதர் வி.கே.கிருஷ்ண மேனன் மூலமாக இங்கிலாந்து பிரதமரிடம் கணபதியை விடுவிக்கும்படி வலியுறுத்தினார்.

அத்துடன் இந்திய, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர்களும் குரல் எழுப்பினர். அந்த நேரத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட இயக்க மேடைகளில் கணபதிக்கு ஆதரவாக அதிகமாக குரல் எழுப்பப்பட்டது. திராவிட நாடு இதழில் பெரியாரும் தலையங்கம் திட்டினார். போதாக் குறைக்கு பன்னாட்டு தொழிலாளர் சம்மேளனமும் கணபதி விடுதலைக்காக முயற்சி மேற்கொண்டது.

எனினும் இறுதியில் எல்லா முயற்சிகளும் வீணாகிப் போயின.

கணபதி தூக்கில் இடப்பட்ட பின் அந்தத் துயரத்தின் வலியோடு வலியாக ‘கயிற்றில் தொங்கிய கண்பதி’ என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதினார் கலைஞர் கருணாநிதி.

கணபதி குறித்து முன்னாள் அமைச்சர் வேதமூர்த்தியின் புகழாரம்

சீர்மிகு மலேசியாவில் தோட்டத் தொழிலாளர் அத்தியாயம் தொடரும்வரை மலாயா புரட்சித் தலைவர் எஸ்.ஏ.கணபதியின் பெயரும் புகழும் நிலைத்திருக்கும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான செனட்டர் பொன்.வேதமூர்த்தி (படம்) மலாயா கணபதி நினைவு நாள் தொடர்பில் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.

மலாயா கணபதி, பத்திரிகை ஆசிரியராகவும் மலாயாவில் விளங்கி இருக்கிறார் என்று பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார் வேதமூர்த்தி. பொதுவுடைமை இயக்கத்தின் சார்பில் அந்நாட்களில் நடத்தப்பட்ட ‘முன்னணி’  என்னும் இதழுக்கு ஆசிரியராக விளங்கியவர் கணபதி என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னஞ்சிறு வயதில் திட்டமிட்டே தூக்கு மேடையில் ஏற்றப்பட்டாலும் மலாயா புரட்சித் தலைவரும் உரிமைப் போராளியுமான எஸ்.ஏ.கணபதி அவர்களின் புகழ் மலேசிய இந்தியர் வாழ்வில் குறிப்பாக தோட்டப் பாட்டாளிகள் சமுதாயத்துடன் இரண்டறக் கலந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார் வேதமூர்த்தி.

-நக்கீரன்