Home One Line P1 பகாங் சட்டமன்ற உறுப்பினர் அபு பாக்கார் ஹருண் காலமானார்

பகாங் சட்டமன்ற உறுப்பினர் அபு பாக்கார் ஹருண் காலமானார்

694
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பகாங் மாநிலத்திலுள்ள  சினி சட்டமன்றத்திற்கான உறுப்பினர் அபு பாக்கார் ஹருண் தனது 60-வது வயதில் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் கோலாலம்பூரில் காலமானார்.

பகாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் இந்தத் தகவலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

அதிகாலை 3.00 மணியளவில் கோலாலம்பூர் மருத்துவமனையில் அபு பாக்கார் மாரடைப்பால் காலமானார் என மற்றொரு ஊடகச் செய்தியும் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

சினி சட்டமன்றம், பகாங் மாநிலத்தின் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் 4 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராவார்.

சினி சட்டமன்றத்திற்கான 2018 பொதுத் தேர்தல் முடிவுகள்

அபு பாக்காரின் மறைவைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் சினி சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல், கொவிட்19 சூழ்நிலையில் நடைபெறும் முதல் இடைத் தேர்தலாக அமையும். கூடல் இடைவெளி, வாக்களிப்பு மையங்களின் அமைப்பு முறை என பல அம்சங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் வண்ணம் இந்த இடைத் தேர்தல் அமைந்திருக்கும்.

கடந்த 2018 பொதுத் தேர்தலில் அம்னோ-தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட அபு பாக்கார் 4,622 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதி இது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஸ் கட்சி வேட்பாளர் 5,405 வாக்குகளும், பெர்சாத்து வேட்பாளர் 1,065 வாக்குகளும் பெற்றனர்.

91 விழுக்காடு மலாய் வாக்காளர்களைக் கொண்டது சினி சட்டமன்றம். அம்னோ-பாஸ் இடையே நிலவும் உடன்பாட்டால் பாஸ் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு அம்னோவுக்கு ஆதரவு தரும் என்பதால், அம்னோ வேட்பாளர் இங்கே மிக எளிதாக வெற்றி பெற முடியும்.

இந்த முறை சினி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கலாம். அந்த வேட்பாளர் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவராக இருப்பாரா அல்லது பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பாரா என்பது இனிமேல்தான் தெரியவரும்.