Home நாடு பெலாங்காய் இடைத் தேர்தல் : மாலை 4.00 மணிவரை 69% வாக்குப் பதிவு – வாக்குகள்...

பெலாங்காய் இடைத் தேர்தல் : மாலை 4.00 மணிவரை 69% வாக்குப் பதிவு – வாக்குகள் எண்ணப்படுகின்றன

302
0
SHARE
Ad
பெலாங்காய் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ அமிசார் அபு அடாம்

பெந்தோங் : இன்று சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற பெலாங்காய் சட்டமன்ற இடைத்தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

30 வாக்களிப்பு வழித் தடங்களைக் கொண்டிருந்த மொத்தம் ஒன்பது வாக்குப்பதிவு மையங்கள் மாலை 6 மணி வரை திறந்திருந்தன.

பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளர் காசிம் சமத், 62, அவரது மனைவி நோர் அத்திகா அபு பக்கர், 55, ஆகியோரும் உடன் வந்தவர்களும் பெல்டா சென்மோய் இடைநிலைப் பள்ளியில் வாக்களித்தனர்.

#TamilSchoolmychoice

பெலாங்காய் சட்டமன்றம் பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

இதற்கிடையில், இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு செயல்முறையை பார்வையிட தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சாலே நேரடியாக வாக்களிப்பு மையங்களுக்கு வருகை தந்தார்.

தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இன்றிரவு 9.00 மணிக்குள்ளாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்முனைப் போட்டியில் பெலாங்காய்…

செப்டம்பர் 23 நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின் போது பெந்தோங் அம்னோ தொகுதியின் செயலவை உறுப்பினரான டத்தோ அமிசார் அபு அடாம் தேசிய முன்னணி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து பாஸ் கட்சியைச் சேர்ந்த காசிம் சாமாட் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவர் பெந்தோங் பாஸ் தொகுதியின் துணைத் தலைவருமாவார்.

ஹாஸ்லி ஹெல்மி டிஎம் சுல்ஹாஸ்லி சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி எல்மினா, ஷா ஆலாம் என்ற இடத்தில் நிகழ்ந்த சிறுரக விமான விபத்தில் கொல்லப்பட்டவர்களில் பகாங் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் பெலாங்காய் சட்டமன்ற உறுப்பினருமான ஜோஹாரி ஹாருணும் ஒருவராவார்.

பெந்தோங் அம்னோ தொகுதி தலைவருமாக ஜோஹாரி செயலாற்றி வந்தார்.

அவரின் அகால மரணத்தைத் தொடர்ந்து பெலாங்காய் சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

பெலாங்காய் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 15-வது பொதுத் தேர்தலில் ஜோஹாரி 4,048 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.