Home One Line P2 தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

882
0
SHARE
Ad

சென்னை – கொவிட்19 தொடர்பில் விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக இதுவரையில் தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ எனப்படும் தமிழக அரசால் நடத்தப்படும் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன.

எனினும், நேற்று வியாழக்கிழமை மே 7 முதல் மீண்டும் மதுபானக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தாலும், தமிழக அரசு விடாப்பிடியாக நேற்று மதுபானக் கடைகளைத் திறந்தது.

கடந்த 43 நாட்களாகத் திறக்கப்படாத மதுபானக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.  நேற்று ஒரு நாளில் மட்டும் 1500 மில்லியன் முதல் 1700 மில்லியன் ரூபாய்கள் வரை மதுபானங்கள் விற்றுத்தீர்ந்தன. நீண்ட வரிசைகளில் மக்கள் நின்று மதுபானங்களை வாங்கத் தொடங்கினர்.

#TamilSchoolmychoice

ஆந்திரா, பாண்டிச்சேரி, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன.

சென்னையில் மட்டும் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை.

எனினும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் மதுபானக் கடைகளைத் திறந்ததை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த வழக்கைத் தொடுத்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கான உத்தரவு முடிவடையும் வரையில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது.

எனினும் இணையம் வழி மதுபானங்களை விற்கலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து எதிர்வரும் மே 18-ஆம் தேதிவரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை தமிழக அரசு திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டார் :

“நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி”