புத்ரா ஜெயா : (கூடுதல் தகவல்களுடன்) தற்போது சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மேலும் 4 வாரங்களுக்கு எதிர்வரும் ஜூன் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று நாட்டு மக்களுக்கு வானொலி, தொலைக்காட்சி வழி ஆற்றிய சிறப்புரையில் பிரதமர் மொகிதின் யாசின் இந்த அறிவிப்பைச் செய்தார்.
மொகிதின் யாசின் ஆற்றிய உரையில் இடம் பெற்ற சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- இதுவரையில் பிரிஹாத்தின் எனப்படும் கொவிட்19 நிதி உதவி 10.6 மில்லியன் மக்களுக்கு சென்று சேர்ந்திருக்கிறது. 11 பில்லியன் ரிங்கிட் ரொக்கமாக விநியோகிக்கப்பட்டிருக்கிறது.
- மாநிலங்களுக்கிடையிலான பயணங்களுக்கான தடை இன்னும் நீடிக்கிறது.
- எனினும் கணவன், மனைவி இருவேறு மாநிலங்களில் இருந்தால் அவர்கள் மாநிலம் விட்டு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
- ஹரிராயா பெருநாளின்போதும் மாநிலம் விட்டு பயணம் செல்வதற்கான தடை நீட்டிக்கப்படும்.
- வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்களில் நடத்தப்படும் தொழுகைகள் மீதான நடைமுறைகள் தற்போது வகுக்கப்பட்டு வருகின்றன.
- நடமாட்டக் கட்டுப்பாடுகள் மீதிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் சுமார் 6.64 மில்லியன் பணியாளர்கள், அதாவது மொத்த பணியாளர்களில் 43.6 பணியாளர்கள் வேலைகளுக்குத் திரும்பியிருக்கின்றனர்.
- பந்துவான் பிரிஹாத்தின் நேஷனல் நிதி உதவி இதுவரையில் பெற முடியாதவர்கள் மேல் முறையீடு செய்வதற்கான தேதி மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- மே 4 முதல் தளர்வுகளுடன் தொடங்கிய நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு சுமுகமாக ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட மொகிதின் யாசின், மத்திய அரசாங்கத்தின் முடிவுகளுக்கு ஏற்பட வணிகங்களைத் திறக்க முன்வந்து செயல்பட்ட மாநில அரசாங்கங்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
- இதுவரையில் 4 வட்டாரங்கள் மட்டுமே கொவிட்19 சிவப்பு மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
- இதுவரையில் கொவிட்19 பாதிப்புகள் குறைவாக இருப்பதோடு கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றன. குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது.