புதுடில்லி – இந்தியத் தலைநகர் புதுடில்லியைச் சுற்றிய பகுதிகளில் 3.5 ரிக்டர் புள்ளி என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டது.
வடகிழக்கு டில்லியிலுள்ள வாசிபூர் என்ற வட்டாரத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் உருவாகியது இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.
இத்தகைய நிலநடுக்கம் புதுடில்லி வட்டாரங்களைத் தாக்குவது கடந்த ஒருமாதத்தில் இது மூன்றாவது முறையாகும்.
ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் பூமிக்கடியில் இந்த நிலநடுக்கம் மையமிட்டு உருவாகியிருக்கிறது. கடந்த இரண்டு முறை நிகழ்ந்த நிலநடுக்கங்களும் இதே பகுதிகளில்தான் உருவாகியதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் அதிகமாக நிலநடுக்கம் ஏற்படும் 5 பகுதிகளில் புதுடில்லி வட்டாரம் நான்காவதாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
இதற்கு முன் 1956, 1966-ஆம் ஆண்டுகளில் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் புதுடில்லிக்கு அருகில் முறையே 6.7 மற்றும் 5.8 ரிக்டர் புள்ளி அளவில் மிகப் பெரிய நிலநடுக்கத் தாக்குதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.