Home One Line P2 கொவிட்19 : வெள்ளை மாளிகையிலும் நுழைந்தது

கொவிட்19 : வெள்ளை மாளிகையிலும் நுழைந்தது

758
0
SHARE
Ad

வாஷிங்டன் – அரச குடும்பத்தினர், பிரதமர்கள், என யாரையும் விட்டு வைக்காத கொவிட்19 தொற்று தற்போது வெள்ளை மாளிகையிலும் ஊடுருவியுள்ளது. அமெரிக்கா முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் அந்தத் தொற்று தற்போது வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரிகளையும் பாதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கத் துணையதிபரின் பத்திரிகை செயலாளர் கொவிட்19 பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து துணையதிபர் மைக் பென்ஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் வெள்ளை மாளிகையின் அதிகாரத்துவ செய்தியின்படி மைக் பென்ஸ் தொடர்ந்து தனது துணையதிபர் கடமைகளை ஆற்றி வருகிறார் என்றும் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

வெள்ளை மாளிகையின் மருத்துவக் குழுவின் ஆலோசனைகளை மைக் பென்ஸ் தொடர்ந்து கடைப்பிடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சனிக்கிழமையன்று அதிபர் டொனால்ட் டிரம்ப், உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்புக் கூட்டம் ஒன்றில் மைக் பென்ஸ் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருப்பதும் பல்வேறு ஆரூடங்களுக்கு வித்திட்டுள்ளது.

மைக் பென்சுக்கு கொவிட்19 பாதிப்பில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் துணையதிபருக்கு ஓட்டுநராகப் பணியாற்றும் உயர் இராணுவ அதிகாரி ஒருவருக்கும் கொவிட்19 தொற்று கண்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.

சுகாதாரத் துறையின் முக்கிய உயர் அதிகாரியாக முன்னணியில் இருந்த டாக்டர் அந்தோணி பவுச்சியும் அண்மைய சில நாட்களாக பொது வெளிகளில் காணப்படாமல் ஒதுங்கியிருக்கிறார். இவர் உட்பட வெள்ளை மாளிகையின் கொவிட்19 நடவடிக்கைக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் தங்களைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.

கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அந்தத் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்படாத எவருடனும் தான் நெருங்கிப் பணியாற்றப் போவதில்லை என டொனால்ட் டிரம்பும் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் டிரம்பை கடுமையாகச் சாடியிருக்கிறார். தனது முன்னாள் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பு ஒன்றில் கொவிட்19 விவகாரத்தை டிரம்ப் நிருவாகம் மிகக் குழப்பமான சீரழிவான முறையில் கையாண்டிருக்கிறது எனச் சாடியிருக்கிறார் ஒபாமா.