சென்னை -மாமதுரை அன்னவாசல் என்ற திட்டத்தின் மூலம் விளிம்பு நிலை மனிதர்களின் பசியாற்ற உணவளிக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்திற்கு தனது அகரம் அறக்கட்டளையின் மூலம் நடிகர் சூர்யா 5 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
ஏற்கனவே, கொவிட்19 தொடர்பான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளால் வருமானம் இன்றி தவிக்கும் திரைக்கலைஞர்களுக்காக பெப்சி என்ற தென்னிந்தியத் திரைப்படத் தொழில்களுக்கான சம்மேளனத்தின் வாயிலாக சூர்யா தனது குடும்பத்தினரின் சார்பில் 10 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியிருக்கிறார்.
தற்போது மாமதுரை அன்னவாசல் திட்டத்திற்கு அவர் 5 இலட்சம் ரூபாய் வழங்கியிருப்பதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் (கம்யூனிஸ்ட் கட்சி) தனது டுவிட்டர் பக்கம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
“நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக 5 இலட்சம் நன்கொடையாக அன்னவாசலில் சோறூட்ட அளித்த @agaramvision இயக்கத்திற்கு நன்றி” என வெங்கடேசன் தெரிவித்தார்.
“ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்” என்பது வள்ளுவன் மொழி. ‘அகரம்’ மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. இப்போது ‘ஆகாரம்’ மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.