அலோர் ஸ்டார்: பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியுடன் இணைவதை அறிவிப்பதற்காக, இரு கெடா மாநில பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஸ்மான் நஸ்ருடின் (லூனாஸ்) மற்றும் டாக்டர் ரோபர்ட் லிங் குய் ஈ (சீடாம்) ஆகியோர் தங்களது செய்தியாளர் சந்திப்பை சீடாம் சேவை மையத்தில் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அரசியல்வாதிகளும் நடப்பு அரசாங்கத்துடன் இணைந்து பெர்சாத்து தலைமையிலான மாநில அரசாங்கத்தை கவிழ்த்துவிடுவார்கள் என்ற ஊகங்கள் பரவலாக உள்ளன.
கெடாவில் 36 மாநில சட்டமன்றங்கள் உள்ளன. தற்போது ஆட்சியில் இருக்கும் நம்பிக்கைக் கூட்டணியில் பிகேஆர் (7), பெர்சாத்து (6), அமானா (4) மற்றும் ஜசெக (2) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் இணைந்து 19 இடங்களை மாநில சட்டமன்றத்தில் கொண்டுள்ளன.
பாஸ் மற்றும் அம்னோ முறையே 15 மற்றும் இரண்டு இடங்களைக் கொண்டுள்ளன. புதிய மாநில அரசு ஆட்சி அமைக்க மேலும் இரண்டு இடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
பிகேஆர் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவினால் அம்னோ-பாஸ் கூட்டணிக்கு 19 இடங்கள் கிடைத்து, ஆட்சி அமைப்பதற்கான பலமும் கிடைத்து விடும்.