கோலாலம்பூர்: பந்துவான் சாரா ஹிடுப் தரவுத்தளம் மற்றும் மலேசிய உள்நாட்டு வருமான வரித்துறை தரவுகளின் அடிப்படையில், 8.3 மில்லியன் பெறுநர்கள் முதல் கட்ட பந்துவான் பிரிஹாதின் நேஷனல் (பிபிஎன்) உதவியைப் பெற்றுள்ளனர்.
மொத்தம் 9.3 பில்லியன் ரிங்கிட் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று உள்நாட்டு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தரவுத்தளங்களில் விவரங்கள் இல்லாதவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் 30 வரை புதிய விண்ணப்பங்கள் மற்றும் முறையீடுகளுக்கு பிபிஎன் அமைப்பு திறக்கப்பட்டது.
அரசாங்கம் நிராகரிக்கப்பட்டவர்களிடமிருந்து குறிப்பாக சமூக ஊடகங்கள் மூலம் பல புகார்களைக் கண்டறிந்துள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, விண்ணப்பதாரருக்கு பிபிஎன் தேவையை மீறும் வருமானம் இருப்பது மற்றும் பிற காரணங்களான வயது தகுதி, முழுநேர மாணவர் நிலை மற்றும் சில தேவைகளுக்கு இணங்காதவை என்று அது குறிப்பிட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, முழுநேர மாணவர்களிடமிருந்து 240,465 விண்ணப்பங்கள் பெறப்பட்டன, அவர்கள் பிபிஎன் தகுதி பெறவில்லை, ஏனெனில் அவர்கள் ஒரு பல்கலைக்கழக மாணவர் உதவித் தொகையான 200 ரிங்கிட்டைப் பெற தகுதியுடையவர்கள் என்று அது தெரிவித்தது.
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வேலை இழந்த அல்லது வருமானத்தில் கணிசமான குறைப்பை சந்தித்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வந்ததாக அரசாங்கத்திற்கு புகார்கள் வந்துள்ளன. எனவே, விண்ணப்பதாரர் வேலை இழப்பு அல்லது வருமானக் குறைப்பை நிரூபிக்கும் துணை ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் மறுபரிசீலனைக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு (rayuanbpn@hasil.gov.my)மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது உள்நாட்டு வருமான வரித்துறை அலுவலகத்திலோ முறையீடு செய்யலாம்.
எஸ்எஸ்எம்மில் பதிவுசெய்த நிறுவனம் கொண்ட விண்ணப்பதாரர் / மனைவி உள்ளிட்ட பிற காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு, விண்ணப்பதாரர் சமீபத்திய வருமானத்தைக் காட்டும் துணை ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலமும் முறையிடலாம்.
பிபிஎன் முறையீட்டு காலம் மே 31 வரை நீட்டிக்கப்படும், அதே நேரத்தில் வருமான வரித்துறை அலுவலகம் மே 11, அல்லது மே 12 முதல் (ஒவ்வொரு மாநிலத்திலும் வேலை நாட்களின் அடிப்படையில்) திறந்திருக்கும்.