புதுடில்லி – கொவிட்19 தொடர்பான நடமாட்டக் கட்டுப்பாடுகளால் இந்தியாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் துறைகளில் ஒன்று இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகளின் படப்பிடிப்புகள்.
படப்பிடிப்புகள் நடக்காத காரணத்தால் தமிழ் உட்பட அனைத்து மொழி தொலைக்காட்சி தொடர்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் தொடர்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாமல் தவிப்பதால், நெட்பிலிக்ஸ், அமேசோன் பிரைம் போன்ற கட்டணம் செலுத்தும் இணைய வழி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தாவியிருக்கிறார்கள்.
கடந்த இரண்டு மாதங்களில் உலகம் முழுவதிலும் பல நாடுகளில் கட்டணம் செலுத்தி இணையம் வழி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போக்கு பன்மடங்காக அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, நெட்பிலிக்ஸ் போன்ற நிறுவனங்கள் அதிக அளவு சந்தாதாரர்களைப் பெற்றிருக்கின்றன. மற்ற வணிகங்கள் எல்லாம் தடுமாறி நிற்கும்போது, இணையம் வழி கட்டணம் செலுத்தி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வழங்கும் வணிக நிறுவனங்கள் அதிக வருமானத்தை ஈட்டத் தொடங்கியிருக்கின்றன.
இந்நிலையில், இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்களின் படப்பிடிப்புகளை எதிர்வரும் ஜூன் மாத இறுதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குறைந்த பட்ச படப்பிடிப்பு பணியாளர்கள், தளத்தில் உள்ள அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டிய கட்டாயம், கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுவது போன்ற கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன. இவையெல்லாம் முறையாக நடக்கின்றனவா என்பதை மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
கொவிட்19 பாதிப்பால் ஒருவர் மரணமடைந்தால் அவரது குடும்பத்திற்கு 5 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை தொலைக்காட்சி அலைவரிசை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் மருத்துவ செலவுகளையும் தொலைக்காட்சி நிறுவனமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
படப்பிடிப்புத் தளங்களில் விபத்துகளின் மூலம் ஒருவர் மரணமடைந்தாலும் 5 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
ஒரே நேரத்தில் பலர் வேலை செய்யாமல் அவர்கள் பிரிந்து இரண்டு நேரக்கட்டுப்பாடுகளில் (ஷிப்ட்) வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் அடுத்த 3 மாதங்களுக்கு படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
படப்பிடிப்புத் தளத்தில் எப்போதும் ஒரு அவசரச் சிகிச்சைக்கான வாகனம் (ஆம்புலன்ஸ்) நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
இதுபோன்ற பல கட்டுப்பாடுகள், நிபந்தனைகளுடன் ஜூன் மாத இறுதியில் இந்தியத் தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.