சென்னை – தமிழகத்தில் கொவிட்19 பாதிப்புகள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இன்று வியாழக்கிழமை (மே 14) புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆகவும், பலி எண்ணிக்கை 66 ஆகவும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
இந்தத் தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
அதே வேளையில் இன்று ஒருநாள் மட்டும் 64 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,240 ஆக உள்ளது.
தற்போது 7365 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக பரிசோதனை மையங்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
38 அரசு மற்றும் 20 தனியார் மையங்கள் என 58 சோதனை மையங்கள் மூலம் இன்று மட்டும் 11,965 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 292,432 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் இதுவரையில் மொத்தம் 1.9 மில்லியன் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன.
இதில் தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 300,000 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இறப்பு விகிதம் தமிழ் நாட்டில் 0.68 சதவீதம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. இந்த வகையில் குறைந்த இறப்பு விகிதத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது.
தமிழகத்தின் இந்த சிறந்த அடைவு நிலைக்கு மாநிலத்தின் சுகாதார வசதிகளே காரணம் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.