அலோர் ஸ்டார்: மாநிலத்தின் சமீபத்திய அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து, கெடா சுல்தான் இன்று வெள்ளிக்கிழமை அனைத்து 36 மாநில சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, இன்று 19 தேசிய கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் சுல்தான் சலேஹுடினை சந்தித்தனர்.
காலை 9.15 மணி முதல் எதிர்க்கட்சித் தலைவர் முகமட் சனுசி முகமட் நோர், அதைத் தொடர்ந்து டத்தோ டாக்டர் முகமட் ஹாயாதி ஒத்மான், டத்தோ சிதி ஆஷா கசாலி, டத்தோ சுராயா யாகோப் மற்றும் டத்தோ நோர்சப்ரினா முகமட் நோர் ஆகியோர் சுல்தானை சந்தித்தனர்.
இதனிடையே, மாலை நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் சுல்தான் சலேஹுடினை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
புதன்கிழமை, தேசிய கூட்டணி சேர்ந்த மூன்று கட்சித் தலைவர்கள், 23 கெடா சட்டமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணங்களை முன்வைக்க மாநில ஆட்சியாளரைச் சந்தித்து, கெடா மந்திரி பெசார் பதவிக்கு புதிய வேட்பாளரை முன்மொழிந்தனர்.
கோலாலம்பூரில் அம்னோ, பாஸ் மற்றும் பெர்சாத்துவின் தலைவர்கள் சுல்தான் சலேஹுடினை சந்தித்தபோது சத்தியப்பிரமாணத்தை ஒப்படைக்கப்பட்டதாக பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ தக்கியுடின் ஹாசன் தெரிவித்தார்.
செவ்வாயன்று, பிகேஆரைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் – அஸ்மான் நஸ்ருடின் (லூனாஸ்) மற்றும் டாக்டர் ரோபர்ட் லிங் (சீடாம்) ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறி, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையில் தேசிய கூட்டணிக்கு தங்கள் ஆதரவை அறிவித்தனர்.
அதே நாளில், கெடா எதிர்க்கட்சித் தலைவர் முகமட் சனுசி முகமட் நோர் 36 சட்டமன்ற உறுப்பினர்களில் 23 பேர் முக்ரிஸின் தலைமை மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக அறிவித்தார்.