கோலாலம்பூர், ஏப்ரல் 12 – மக்கள் பிரதிநிதி என்ற ஒரே காரணத்திற்காக சரவாக் முதலமைச்சர் தாயிப்புக்கு, ஊழல் விசாரணைகளில் சிறப்பு சலுகைகள் கொடுக்கக்கூடாது என்று மலேசிய சர்வதேச வெளிப்படை அமைப்பின் (Transparency International-Malaysia (TI-M)) சார்பாக நேற்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அவ்வமைப்பின் தலைவர் பால் லோ (படம்) கூறுகையில்,
“சரவாக் ஊழல் விவகாரம் பற்றிய விசாரணைகளில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு ஒத்துழைப்பு தரமுடியாது என்று தாயிப் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தாயிப் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற காரணத்திற்காக, தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்காமல் இருப்பதும், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தை ஒழுக்கமற்றதாகவும், நேர்மையற்றதாகவும் சித்தரித்து வெளிப்படையாகவே கருத்துக்களை கூறுவதும் கண்டிக்கத்தக்கது.
உண்மையில், மக்கள் தேர்தல் மூலம் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதன் காரணம், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், மக்களை நல் வழி நடத்திச் செல்லவும் ஆகும். ஆனால் தாயிப்பின் இது போன்ற மரியாதையற்ற கருத்துக்கள் அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைத்து விடும்.
மேலும், ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால், அவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், தகுந்த ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில், அவரை உடனடியாக தங்கள் விசாரணைகளுக்கு உட்படுத்துவதற்கு மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு முழு அதிகாரம் உண்டு” என்று லோ தெரிவித்துள்ளார்.