Home நாடு விக்னேஸ்வரன் : அடுத்தது எந்த பதவி? தூதரா? மக்களவைத் தலைவரா?

விக்னேஸ்வரன் : அடுத்தது எந்த பதவி? தூதரா? மக்களவைத் தலைவரா?

957
0
SHARE
Ad

(எதிர்வரும் ஜூன் 22-ஆம் தேதியோடு தனது இரண்டு தவணைகள் செனட்டர் பதவி முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வகித்து வந்த நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவிக் காலமும் முடிவுக்கு வருகிறது. தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் அவரது அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் பார்வை)

கோலாலம்பூர் – எதிர்வரும் ஜூன் 22-ஆம் தேதியோடு தனது இரண்டு தவணைகளுக்கான செனட்டர் பதவியில் காலமும் முடிவடைவதால் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியிலிருந்தும் விலகிச் செல்கிறார் டான்ஸ்ரீ எஸ.ஏ.விக்னேஸ்வரன்.

இப்போது அரசியல் வட்டாரங்களில் உலா வரும் ஆரூடம் தேசிய முன்னணி அரசாங்கத்தில் விக்னேஸ்வரனுக்கு அடுத்து என்ன பதவி வழங்கப்படும் என்பதுதான்.

#TamilSchoolmychoice

துன் சாமிவேலு வகித்த தெற்கு ஆசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதர் பதவியில் அவருக்குப் பிறகு யாரும் நியமிக்கப்படவில்லை.

அடுத்தடுத்து சிலர் அமைச்சர் அந்தஸ்து கொண்ட தூதர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் அதில் ஒருவர். இன்னொருவர் பிந்துலு (சரவாக்) நாடாளுமன்ற உறுப்பினர் தியோங் கிங் சிங்.

எனவே, மஇகா தலைவரான விக்னேஸ்வரன், முந்தைய மஇகா தலைவர் வகித்த அதே பதவியில், அமைச்சர் அந்தஸ்துடன் கூடிய தூதராக நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் நான்கு அமைச்சர் இருந்தார்கள். இப்போது ஒரே அமைச்சர்தான் என்ற குறைகூறல்கள் இந்திய சமுதாயத்தில் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

அதைத் தீர்க்கும் வண்ணம் விக்னேஸ்வரனுக்கும் அமைச்சர் அந்தஸ்துடன் கூடிய தூதர் பதவி வழங்கப்படலாம்.

மக்களவைத் தலைவர் பதவி வழங்கப்படுமா?

தற்போது மக்களவைத் தலைவர் பதவி வகிக்கும் முகமட் அரிப் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தால் துன் மகாதீர் ஆதரவோடு நியமனம் பெற்றவர். முன்பு பிகேஆர் கட்சியிலும் உறுப்பினராக இருந்தவர்.

எனவே, இவரை நீக்கி விட்டு புதிய மக்களவைத் தலைவர் அடுத்த ஜூலை மாத நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பாக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

தேசியக் கூட்டணியின் அங்கமான மஇகாவின் தேசியத் தலைவர் – மேலவைத் தலைவராக நான்கு ஆண்டு கால அனுபவம் – என மக்களவைத் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவராகவும் விக்னேஸ்வரன் கருதப்படுகிறார்.

எனினும், மக்களவைத் தலைவர் முகமட் அரிப் தாமாகவே முன்வந்து தனது அவைத் தலைவர் பதவியிலிருந்து விலகாவிட்டால், அவரை அகற்றுவது என்பது பல சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும்.

எனவே, அமைச்சர் அந்தஸ்துடன் கூடிய தூதராக விக்னேஸ்வரன் நியமிக்கப்படவே வாய்ப்புகள் அதிகம் என அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.

அல்லது அரசாங்கச் சார்பு நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பையும் விக்னேஸ்வரன் ஏற்கக் கூடும்.

ஜூன் 22-ஆம் தேதிக்குப் பிறகு அல்லது அதற்கு முன்பாகவே விக்னேஸ்வரனின் புதிய பதவி பற்றிய அறிவிப்பும் வெளியாகும்.

-இரா.முத்தரசன்